நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற சமூக ஊடகமான எக்ஸ் பயனர் ஒருவரின் கோரிக்கைக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.
அமைச்சரின் சமூக வலைதள இடுகை ஒன்றுக்கு பதில் அளித்த அந்தப் பயனர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அப்பயனரின் இடுகையைப் பகிர்ந்துள்ள நிதியமைச்சர், “அவரின் கருத்துக்கள் மதிப்பு வாய்ந்தது என்றும் அரசு மக்களின் குரல்களை கேட்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
துஷார் சர்மா என்ற எக்ஸ் பயனர், “நாட்டுக்கான உங்களின் பங்களிப்பு மற்றும் முயற்சிகளை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். மேலும் நீங்கள் எங்களின் மேலான அபிமானத்தையும் பெற்றுள்ளீர்கள். நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரணம் வழங்குவதையும் கொஞ்சம் பரிசீலிக்குமாறு உங்களை நான் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன். அதில் அடங்கியிருக்கும் சவால்களை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் இது ஒரு இதயப்பூர்வமான வேண்டுகோள்” என்று தெரிவித்துள்ளார்.
சர்மாவின் இந்த இடுகையை டேக் செய்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதற்கு பதில் அளித்துள்ளார். அமைச்சர் தனது பதிலில், “உங்களின் கனிவான வார்த்தைகள் மற்றும் புரிதலுக்கு நன்றி. நான் உங்களின் கவலையை உணர்கிறேன், உங்களைப் பாராட்டுகிறேன். பிரதமர் மோடியின் அரசு பதில் அளிக்கக்கூடிய அரசு. அது மக்களின் குரல்களுக்கு செவி சாய்க்கிறது. உங்களின் புரிதலுக்கு மீண்டும் ஒரு நன்றி. உங்களின் கருத்து மிகவும் மதிப்பு மிக்கது” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்திய நடுத்தர வர்க்கத்தினரை மிகவும் அச்சுறுத்தி வரும் பணவீக்கம் அதிகரித்து வரும்நிலையில் இந்த கோரிக்கை வந்துள்ளது. அக்டோபர் மாதத்தின் சில்லரை பணவீக்கம் 6.21 சதவீதமாக அதிகரித்திருந்தது. செப்டம்பர் மாதத்தின் உணவு பணவீக்கம் 10.8 சதவீதமாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.