தமிழக மீனவர்கள் மேலும் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

தமிழக மீனவர்கள் மேலும் 12 பேர் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நவ.10-ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று நாகப்பட்டினம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நாகப்பட்டினம்: நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த சில நாட்களில் 35 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு துவங்கியதில் இருந்து இதுவரை 485-க்கும் அதிகமான மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 65-க்கும் அதிகமான படகுகளும் சிறை பிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறாக கைது செய்யப்படும் மீனவர்களுக்கு பெரும் அபராதத் தொகைகளை இலங்கை நீதிமன்றங்கள் விதிக்கின்றன. மேலும், மாதக் கணக்கில் மீனவர்கள் சிறையில் இருக்க நேரிடுகிறது. இதனால், வாழ்வாதாரங்களை இழந்து கைதாகும் மீனவர்களின் குடும்பங்கள் தவிக்கும் சூழல் நிலவுவதால் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அதேபோல், இந்திய – இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மீனவர் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் இரு நாட்டு மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுகளை விரைந்து நடத்த மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண கோரி தமிழக முதல்வரும் மத்திய அரசுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், தமிழக மீனவர்கள் மேலும் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.