ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தின் தொலைதூர வனப்பகுதியில் தீவிரவாதிகளுடன் ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “ராணுவம் மற்றும் போலீஸார் இணைந்து நடத்திய கூட்டு தேடுதல் வேட்டையின் போது கேஷ்வான் வனப்பகுதியில் முற்பகல் 11 மணிக்கு இந்த துப்பாக்கிச்சண்டை நடந்தது. கிராமப்புற காவலர்கள் இருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த கூட்டு தேடுதல் வேட்டை குந்வாரா மற்றும் கேஷ்வான் காடுகளில் கடந்த வியாழக்கிழமை மாலை முதல் நடந்து வருகிறது.
கேஷ்வான்- கிஸ்த்வாரில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையை துப்பாக்கிச் சண்டை தொடங்கியுள்ளது. மூன்று அல்லது நான்கு தீவிரவாதிகள் காட்டுக்குள் பதுங்கியிருக்கலாம். இந்த தீவிரவாத குழுக்கள் தான் இரண்டு அப்பாவி கிராம காவலர்களைக் கொலை செய்திருக்கும்” என்று தெரிவித்தனர்.
முன்னதாக ஸ்ரீநகரில் உள்ள ஜபர்வான் காட்டில் மற்றொரு துப்பாக்கிச்சண்டை இன்று காலையில் நடந்தது. தீவிரவாதிகளின் நடமாட்டம் குறித்த உளவுத்துறை தகவலின் அடிப்படையில் ஸ்ரீநகரின் ஜபர்வான் காட்டில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீஸார் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது.