ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி வாசிப்போர் மன்றக் கூட்டத்தில் கதைகள் சொல்லிய அசத்திய மாணவர்கள்

புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களே நடத்திய வாசிப்போர் மன்றக் கூட்டம் நடைபெற்றது. 

விழாவிற்கு பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல் தலைமையேற்றார். சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் கவிஞர் கவிமதி சோலச்சி கலந்து கொண்டார். விழாவில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் என்கிற எஸ்.ரா. எழுதிய சிறார் கதைகளை மாணவர்கள் சுவையாகக் கூறினார்கள். மாரீஸ்வரி “எலியின் பாஸ்வேர்ட்,”  தாரிகா “மீசையில்லாத ஆப்பிள்”, தருண் வர்சன் “அக்கடா”, லோகித் “அண்டசராசரம்”, சர்விகர் “கால்முளைத்த கதைகள்”, அன்பழகன் “முட்டாள்களின் மூன்று கதைகள்”,  ஆகிய கதைகளை சுவைபடக் கூறினார்கள். நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட  எழுத்தாளர் கவிஞர் சோலச்சி “ நான் நிறைய பள்ளி விழாக்களுக்கு சென்றிருக்கின்றேன். ஆனால் இந்தப் பள்ளி மாணவர்கள் பள்ளியின முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தியின் வழிகாட்டலில் பாடப்புத்தகங்களைப் போலவே கதைகளை, கவிதைகளை வாசிக்கின்ற, அழகாகக் கதைகளை சொல்கின்றவர்களாக இருக்கின்றார்கள்.

இந்தக் கூட்டத்தில் எழுத்தாளர் எஸ்.ரா. கலந்துகொண்டிருந்தால் நிச்சயம் கதைகள் சொன்ன இந்தக் குழந்தைகளை அள்ளியணைத்துக் கொண்டாடியிருப்பார். கதைகள் வெறும் கற்பனைகள் அல்ல. உங்களைச் சுற்றி தினந்தோறும் வீட்டில், பேருந்தில், பள்ளியில் நடக்கின்ற சம்பங்களை எழுதிப்பாருங்கள். அவை சிறந்த கதைகளாக உருவாகிவிடும். இப்போது மற்றவர்களின் கதைகளை வாசித்து கதை சொல்லும் உங்களின் கதைகளை எதிர்காலத்தில் மற்றவர்கள் வாசிப்பார்கள். அப்படி இங்கே இருக்கின்ற மாணவச் செல்வங்கள் சிறந்த படைப்டபாளிகளாக உருவாகிட எனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்” என்று குறிப்பிட்டார். விழாவில் கவிஞர்கள் சிக்கந்தர், ம.செல்லத்துரை ஆகியோர் கலந்து கொண்டனர். கவிஞர் காசாவயல் கண்ணன் நிகழ்வினை ஒருங்கிணைத்தார். முன்னதாக மாணவி ஹரிப்பிரியா வரவேற்க, நிறைவாக மாணவி சிவானி நன்றி கூறினார். மதுஸ்ரீ தொகுத்து வழங்கினார்.