கோவை வளர்ச்சிக்கான ‘மாஸ்டர் பிளான்’ வெளியிடுவதில் தாமதம் – முதல்வர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கோவையின் வளர்ச்சிக்கு உதவும் ‘மாஸ்டர் பிளான்’ அறிக்கை வெளியிடுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதை விரைவுபடுத்தி வெளியிட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக செயல்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் தொழில் துறை மட்டுமின்றி அனைத்துவித துறைகளிலும் வேகமாக வளர்ந்து வரும் மாவட்டங்களில் ஒன்றாக கோவை உள்ளது. கோவையின் வளர்ச்சிக்கு ஏற்பவும், மக்கள் மற்றும் அரசு நிர்வாகத்தின் மக்கள் நலன் சார்ந்த எதிர்கால திட்டமிடல்களுக்கும் ‘மாஸ்டர் பிளான்’ (முழுமைத் திட்டம்) என்பது மிக முக்கியமானது. நகரின் எதிர்கால வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில், ‘மாஸ்டர் பிளான்’ முக்கியப் பங்காற்றுகிறது.

கோவையில் கடந்த 1994-ம் ஆண்டிலிருந்து மாஸ்டர் பிளான் பயன்பாட்டில் உள்ளது. மாஸ்டர் பிளானை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். ஆனால், கோவை மாஸ்டர் பிளான் கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக புதுப்பிக்கப்படவில்லை. இச்சூழலில், நகரின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, கோவை மாஸ்டர் பிளான் திட்டத்தை புதுப்பிப்பது தொடர்பான நடவடிக்கையை திமுக அரசு தீவிரப்படுத்தியது.

அதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட நகர ஊரமைப்புத்துறையின் சார்பில், 2041-ம் ஆண்டு மக்கள் தொகையை மையப்படுத்தி, கோவை மாநகராட்சி, காரமடை, கருமத்தம்பட்டி, கூடலூர், மதுக்கரை ஆகிய 4 நகராட்சிகள், 21 பேரூராட்சிகள், 66 கிராம ஊராட்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கி, 1531.53 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கோவை உள்ளூர் திட்டக்குழுமப் பகுதிக்கான திருத்திய எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு, மாஸ்டர் பிளான் வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு, கடந்த பிப்ரவரியில் வெளியிடப்பட்டது.

இதில், திருத்தங்கள் கோரி பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். நிலம் வகை மாற்றம், வேளாண் நிலமாக உள்ளதை வணிக பயன்பாட்டுக்கு மாற்ற வேண்டும், குடியிருப்பு நிலத்தை தொழில் பயன்பாட்டுக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 3,400 மனுக்கள் வந்துள்ளன. இவற்றை ஆய்வு செய்து, திருத்தும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

மாஸ்டர் பிளான் அறிக்கை தாமதம் குறித்து சமூக செயல்பாட்டாளர்கள் கூறும்போது, ‘‘வரைவு அறிக்கை வெளியிட்டு சில மாதங்களிலேயே இறுதி அறிக்கை வெளியிடப்பட்டிருக்க வேண்டிய சூழலில், இந்த தாமதம் ஏமாற்றமே. கோவை நகரின் அடுத்த 40 வருட வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டம், தொழிற்சாலை வழித்தட திட்டம், பசுமை மற்றும் நீர்நிலை கட்டமைப்புகள், பொருளாதார திட்டமிடல், உள்வட்ட சுற்றுச்சாலைகள், நகர்ப்புற வனவியல், வளர்ச்சிக்கான நில உபயோகங்கள், திட்ட சாலைகள் ஆகியவற்றின் நில விவரங்கள் சர்வே எண்ணுடன் மாஸ்டர் பிளானில் இடம் பெறும். கோவை போன்ற ஒரு வளர்ச்சியடைந்து வரும் நகரங்களில், மாஸ்டர் பிளான் அறிக்கை இறுதிப்படுத்தி வெளியிடுவது தாமதமாவது ஏமாற்றமே.

சாலை மேம்பாட்டுத் திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்கள் போன்றவை பாதிக்கப்படுவதை தவிர்க்கவும், எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டும், மாஸ்டர் பிளான் இறுதி அறிக்கையை விரைவில் வெளியிட வேண்டும். கோவைக்கு ஆய்வுக்காக வரும் முதல்வர் இதுதொடர்பாக சிறப்பு கவனம் செலுத்திட வேண்டும்’’ என்றனர்.

இதுகுறித்து மாவட்ட நகர ஊரமைப்புத்துறையின் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘கடந்த ஜூலை இறுதியிலேயே திருத்தங்களை முடித்து அரசுக்கு இறுதி அறிக்கை சமர்ப்பித்திருக்க வேண்டும். மொத்தம் 3,400 மனுக்கள் வந்துள்ளதால் ஆய்வு செய்து திருத்தங்கள் செய்வதில் தாமதமேற்பட்டன. தற்போதைய சூழலில் 3,000 மனுக்கள் கள ஆய்வுக்கு பின்னர், உறுதி செய்து திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள மனுக்கள் மீதான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலைகள் தொடர்பான கோரிக்கைகள் இன்னும் கள ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. டிசம்பர் இறுதிக்குள் அரசுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.