தீபாவளிக்கு இலவச அரிசி, சர்க்கரை ரேஷனில் அனைத்து தொகுதிகளிலும் முழுமையாக விநியோகம் நடக்காதது பற்றி கேள்ளி கேட்டதற்கு “நகருங்க” என முதல்வர் ரங்கசாமி கோபத்துடன் குறிப்பிட்டு புறப்பட்டார்.
புதுச்சேரியில் தீபாவளிக்கு இலவச அரிசி, சர்க்கரை ரேஷனில் தரப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். ஆனால் பல இடங்களில் ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை. பல தொகுதிகளிலும் விநியோகிக்கப்படவில்லை. அதேபோல் ஆயிரம் ரூபாய் மளிகைப் பொருட்கள் ரூ.500-க்கு தரப்படும் என அறிவித்தும் செயல்படுத்தவில்லை. இந்நிலையில் இன்று வீராம்பட்டினம் மீனவ கிராமத்தில் மீன் பிடி துறைமுக கட்டுமான விரிவாக்கப்பப் பணிக்கான பூமி பூஜை நடந்தது. இதில் கலந்துகொண்டு முதல்வர் ரங்கசாமி பூமி பூஜையை தொடங்கிவைத்தார்.
இதில் பங்கேற்ற முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “புதுச்சேரியில் வீராம்பட்டினம் மீனவ கிராமத்தில் ரூ.53.38 கோடிக்கு அனுமதி பெறப்பட்டு ரூ.46.16 கோடிக்கு மீன்பிடி துறைமுக கட்டுமான பணிகளுக்கான பூமிபூஜை தொடங்கியது. விரைந்து இரண்டு ஆண்டுகளில் பணிகளை முடிக்க சொல்லியுள்ளேன்.” என்றார்.
அதையடுத்து ரேஷனில் தீபாவளிக்கு இலவச அரிசி, சர்க்கரை அனைத்து தொகுதிகளிலும் போடவில்லையே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “போட்டுட்டு இருக்காங்க. நகருங்க” என்று கோபத்துடன் முதல்வர் ரங்கசாமி புறப்பட்டார்.
அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகளும், மக்களும் வரவில்லை என்கிறார்களே என்று கேட்டதற்கு, “போட்டுட்டு இருங்காங்க. தெரிஞ்சுக்கிட்டே கேட்கிறீங்க. வங்கிக் கணக்கில் பயனாளிகளுக்கு உடன் கிடைக்கும். ஒரே நாளில் அரிசி போட முடியுமா?” என்று கோபத்துடன் முதல்வர் புறப்பட்டார்.