இந்திய பங்குச் சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 1,400 புள்ளிகள் சரிவுடனும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 430 புள்ளிகள் சரிவுடனும் வர்த்தகமானது.
காலை 11.40 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,343 புள்ளிகள் அதாவது 1.68% சரிந்து 78,380.84ல் வர்த்தகமானது. இதேபோல், நிஃப்டி 445.30 புள்ளிகள் சரிந்து அதாவது 1.83% சரிந்து 23,859.05ல் வர்த்தகமானது. 4 மாதங்களில் இல்லாத அளவு நிஃப்டி சரிவைச் சந்தித்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், ஐசிஐசிஐ வங்கி லிமிடெட் மற்றும் இன்ஃபோசிஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் பங்குகளுக்கு ஏற்பட்ட வீழ்ச்சியே, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாக இருந்தன.
அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்த நிச்சயமற்ற தன்மை காரணமாகவே பங்குச் சந்தை வீழ்ச்சியை சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது. நவம்பர் 5ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற நிலையில், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதுவரை வெளியாகி உள்ள தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் இருவருமே ஏறக்குறைய சம அளவில் ஆதரவை பெற்றுள்ளனர்.
இந்தியாவின் அடுத்த நிதி ஆண்டுக்கான வருவாய் மதிப்பீடுகளில் ஏற்பட்ட சரிவு, வெளிநாட்டு முதலீடுகள் அதிக அளவில் வெளியேறியது, ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் சரிந்தது, புவிசார் அரசியல் பதற்றங்கள், கச்சா எண்ணெய் உள்பத்தி செய்யும் நாடுகள், உற்பத்தி உயர்வை தாமதப்படுத்துவதால் ஏற்பட்டுள்ள எண்ணெய் விலை உயர்வு ஆகியவை உள்நாட்டு பங்கு விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.