‘அரசியலமைப்பை பாதுகாப்பதே இந்தியாவின் முதன்மையான போர்’ – வயநாட்டில் ராகுல் காந்தி பேச்சு

நாட்டின் இன்றைய முதன்மையான போராட்டம் அரசியல் அமைப்பை பாதுகாப்பதே என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் அவர், இந்திய அரசியல் அமைப்பு வெறுப்புடன் எழுதப்படவில்லை என்றும், மாறாக அது பணிவுடனும் அன்புடனும் எழுதப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

தனது சகோதரியும், வயநாடு இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளருமான பிரியங்கா காந்தியை ஆதரித்து ராகுல் காந்தி இன்று வயநாட்டில் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்குள்ள மனந்தவதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “இன்று நாட்டின் முதன்மையான போராட்டம், நமது நாட்டின் அரசியலமைப்புக்கான போராட்டம்தான். இன்று நமக்கு கிடைக்கும் பாதுகாப்பு, நமது நாட்டின் மகத்துவம் அனைத்துமே அரசியலமைப்பில் இருந்து வெளிப்பட்டவை.

அரசியல் சாசனம் கோபத்துடனோ, வெறுப்புடனோ எழுதப்படவில்லை. அது பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து போராடியவர்கள், துன்பப்பட்டவர்கள், சிறைவாசத்தை அனுபவித்தவர்கள் எழுதியது. அவர்கள் நமது அரசியலமைப்பை பணிவுடனும், அன்புடனும், பாசத்துடனும் எழுதினர்.

இது அன்புக்கும் வெறுப்புக்கும் இடையில் நடக்கும் சண்டை. இது நம்பிக்கைக்கும், பாதுகாப்பின்மைக்குமான சண்டை. உண்மையில் நீங்கள் இந்தச் சண்டையில் வெற்றி பெற விரும்பினால், உங்கள் இதயத்தில் இருந்து வெறுப்பையும், கோபத்தையும் நீக்க நீங்கள் உதவ வேண்டும். அதை அன்பு, பணிவு, இரக்கத்தினைக் கொண்டு நிரப்ப வேண்டும்.

எனது தந்தையின் (ராஜீவ் காந்தி) கொலை வழக்கில் சிக்கிய பெண்ணை நேரில் சென்று சந்தித்து கட்டிப்பிடித்துக் கொண்டவர் பிரியங்கா காந்தி. நளினியை சந்தித்து விட்டு வந்த பின்பு என்னிடம் பேசிய பிரியங்கா மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தார். ‘நான் நளினிக்காக மிகவும் மோசமாக உணர்கிறேன்’ என்று கூறினார்.

அது அவர் (பிரியங்கா காந்தி) பெற்ற பயிற்சி. என்னைப்பொறுத்தவரையில் இதுபோன்ற அன்பின் அரசியல் தான் இந்தியாவுக்கு தேவை. வெறுப்பின் அரசியல் இல்லை. மாறாக அன்பு மற்றும் பாசத்தின் அரசியல்” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

வயநாடு வேட்பாளரும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி பேசும் போது,”எனது சகோதரருக்கு எதிராக மிகப்பெரிய அளவிலான பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டபோது, அவர் உண்மை மற்றும் உரிமைக்காக போராடுகிறார் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள். ராகுல் காந்தி உங்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பியுள்ளார். ஆனால் இந்த அரசு மக்களுக்கு சேவை செய்யும் அரசாக இல்லை.

மோடி அரசாங்கம், அவரின் பணக்கார நண்பர்ளுக்காக மட்டுமே வேலை செய்கிறது. அவரது நோக்கம் சிறந்த சுகாதாரம், சிறந்த வாழ்க்கைத்தரம், வேலைவாய்ப்புகளை வழங்குவது இல்லை. அவரது நோக்கம் தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது. அதற்கு அர்த்தம் என்னவென்றால், உங்களிடம் வெறுப்பையும், கோபத்தையும் விதைத்து உங்களைப் பிரிப்பது. அவர்கள் உங்களிடமிருந்து நிலங்கள் துறைமுகங்களைப் பறித்து தொழிலதிபர்களுக்கு கொடுக்கிறார்கள்” என்று பிரியங்கா கூறினார்.

வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா அங்கு தனது தேர்தல் பிரச்சாரத்தை தனது சகோதரர் ராகுல் காந்தியுடன் இன்று மீண்டும் தொடங்கினார். பிரியங்கா நவம்பர் 7ம் தேதி வரை கேரளாவில் இருப்பார் என்று காங்கிரஸ் கட்சித் தெரிவித்துள்ளது.