நீட் தேர்வு விலக்கு முதல் மது ஒழிப்பு வரை : தவெக செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னையில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் நீட் தேர்வு முதல் மது ஒழிப்பு வரை பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில், பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதன்படி, கழக மாநாடுக்கு வரும்போது உயிர் இழந்த நபர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், தமிழ் மொழி சார்ந்த விசயங்களில் தலையிட மத்திய அரசுக்கு உரிமை இல்லை. மும்மொழி கொள்கையை திணிக்கும் முயற்சி நிறைவேறாது. மொழிப்போர் தியாகிகள் வாழ்ந்த மண்ணில் எக்காலத்திலும் மும்மொழி கொள்கை நிறைவேறாது. இரு மொழி கொள்கைக்கு எதிராக 3-வது மொழியை திணிக்க முயலும் கனவு நிறைவேறாது. இதில் தலையிட, மத்திய அரசுக்கோ, மத்திய அரசின் பிரதிநிதிகளுக்கோ உரிமையில்லை.

தமிழக மக்களை தி.மு.க. அரசு ஏமாற்றுகிறது என கூட்டத்தில் கூறப்பட்டது. மாநில தன்னாட்சி உரிமை குறித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். மதுக்கடைகளை மூடி விட்டு அரசின் வருவாய்க்கு மாற்று திட்டங்களை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

சாதிவாரி கணக்கெடுப்பு பணியை மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நிலையில் மத்திய அரசை காரணம் காட்டும் தமிழக அரசுக்கு கண்டனம். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். கல்வியை மாநில அரசு பட்டியலில் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேறின. இதேபோன்று, மின்சார கட்டணத்திற்கு மாதம் ஒரு முறை கணக்கெடுப்பு செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்து விட்டு தற்போது வரை அதனை செய்யாத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கால நிர்ணயம் செய்து மது கடைகளை மூட வேண்டும் உள்ளிட்ட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.