அத்தியாவசிய மருந்துகளின் விலையேற்றம் குறித்து பிரதமருக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கடிதம்

தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் (என்பிபிஏ) சமீபத்தில் அறிவித்த மருந்துகளின் விலை உயர்வு அறிவிப்புக்கு பின்னால் உள்ள காரணங்களை மேலும் விளக்கமாக தெரிவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு விருதுநகர் மக்களவை எம்.பி. மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து மாணிக்கம் தாகூர் தான் எழுதிய கடிதத்தின் பிரதியை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அக்.25-ம் தேதியிடப்பட்ட அந்த கடிதத்தில், தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் பரவலாக பயன்படுத்தப்படும் எட்டு மருந்துகளின் உச்சவரம்பு விலையை 50 சதவீதம் உயர்த்தும் முடிவு குறித்து தனது கவலையை பதிவு செய்துள்ளார். கடிதத்தில் மாணிக்கம் தாகூர் கூறியிருப்பதாவது: கடந்த மாதம் தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம், எட்டு மருந்துகளின் பதினொன்று பட்டியலிடப்பட்ட பார்முலாக்களின் உச்சபட்ச விலையை அதன் தற்போதைய விலையில் இருந்து 50 சதவீதம் அதிகரித்துக் கொள்ள ஒப்புதல் அளித்தது.

இந்த மருந்துகளில் பெரும்பாலானவை குறைந்த விலையுடையவை, நாட்டின் பொது சுகாதாரத் திட்டங்களில் அவசர சிகிச்சைகளுக்காக முதன்மையாக பயன்படுத்தப்படக் கூடியவை. அசாதாரணமான சூழ்நிலை மற்றும் பொதுநல அக்கறையே இந்த விலை அதிகரிப்புக்கான காரணங்களாக அரசு கூறியுள்ளதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

என்றாலும் இந்த அதிமுக்கியமான குறிப்பிடத்தக்க முடிவுக்கு பின்னால் இருக்கும் காரணத்தை விளக்கி கூறுவதும் அத்தியாவசியமானது என்றும் நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது கடிதத்தில், “இந்த விலையுயர்வு லட்சக்கணக்கான மக்களின் அத்தியாவசிய மருந்து தேவைகளை பாதிக்கிறது. விலை உயர்வு அறிவிப்பு பற்றி விளக்கிய என்பிபிஏ, செயலில் உள்ள மருந்து பொருள்களுக்கான விலை, உற்பத்திச் செலவு அதிகரிப்பு, பரிமாற்ற விலையில் உள்ள மாற்றம் போன்றவை சுட்டிக்காட்டி, மருந்து உற்பத்தியாளர்களிடம் இருந்து விலையை மாற்றி அமைப்பதற்கான விண்ணப்பங்களை ஆணையம் பெற்றது என்று தெரிவித்துள்ளது.

மருந்துகளின் இந்த திடீர் விலையேற்றம் அதனைப் பயன்படுத்துபவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தலாம் மற்றும் அவர்களின் உடல்நலனில் சமரசம் செய்து கொள்ளும் நிலையை உருவாக்கலாம்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விலை உயர்வு நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் மீது ஏற்படுத்தியிருக்கும் உண்மையான தாக்கத்தை ஆய்வு செய்ய தற்சார்புடைய மறுசீராய்வு குழுவினை அமைக்க வேண்டும். இந்த குழுவானது எதிர்காலத்தில் விலை நிர்ணயத்துக்கான கொள்கைகள் வகுக்கலாம் என்றும் பரிந்துரை ஒன்றையும் அவர் வழங்கியுள்ளார்.