“எதை பற்றியும் கவலைப்படாமல் பணியாற்றுங்கள்” – தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

“தமிழக மக்களிடம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை நல்ல முறையில் சென்றடைந்துள்ளது. உங்கள் தொகுதியில், வேறு ஏதாவது பிரச்சினைகள் இருந்தாலும், உடனடியாக கட்சி தலைமைக்கு தெரியப்படுத்துங்கள். எதைப் பற்றியும் கவலைப்படாமல், உங்களுக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள பணிகளை செய்யுங்கள். மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்,” என்று திமுக சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் நியமிக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப்பொதுச் செயலாளர்கள் மற்றும் திமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தொகுதி பார்வையாளார்களாக நியமிக்கப்பட்டு விட்டதால், தேர்தலில் சீட் கிடைக்காது என்று கவலைப்பட வேண்டாம். உங்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும். கட்சி பணிகளை செய்யுங்கள். தமிழக மக்களிடம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை நல்ல முறையில் சென்றடைந்துள்ளது. உங்கள் தொகுதியில், வேறு ஏதாவது பிரச்சினைகள் இருந்தாலும், உடனடியாக கட்சி தலைமைக்கு தெரியப்படுத்துங்கள். எதை பற்றியும் கவலைப்படாமல், உங்களுக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள பணிகளை செய்யுங்கள். மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்,” என்று பேசினார்.

முன்னதாக, வரும் 2026 சட்டமன்ற தேர்தலில், திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக, துணை முதல்வர் உதயநிதி தலைமையில், தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.