டெல்லி பங்கர் கிங் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான ‘லேடி டான்’ உ.பி.யில் கைது

இந்தாண்டு ஜூன் மாதம் டெல்லியில் ரஜோரி கார்டன் பகுதியில் உள்ள பங்கர் கிங்-ல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய, ஹுமான்ஷு பாவ் கும்பலைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியான 19 வயது பெண்ணை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவரின் பெயர் அன்னு தங்கர் என்று தெரியவந்துள்ளது. லேடி டான் என போலீஸாரால் குறிப்பிடப்படும் இவர், உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் இந்தியா – நேபால் எல்லைப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு டெல்லியில் உள்ள துரித உணவகத்தில் இந்தாண்டு நடந்த கொலை சம்பவத்தினைத் தொடர்ந்து அவர் போலீஸாரிடம் பிடிபடாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.

கடந்த ஜூன் 18-ம் தேதி மேற்கு டெல்லியின் ரஜோரி கார்டனில் உள்ள பங்கர் கிங் உணவகத்தில், ஒரு பெண்ணுடன் அமர்ந்திருந்த 26 வயதான அமன் ஜுன் என்ற இளைஞர் சுட்டுக்கொல்லாப்பட்டார். அன்றைய தினம் இரவு 9.30 மணிக்கு ரஜோரி கார்டனுக்கு மூன்று பேர் பைக்கில் வந்தனர். அவர்களில் ஒருவர் வெளியே நிற்க மற்ற இருவர் உணவகத்துக்குள் சென்று அமன் மீது 40 சுற்றுக்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அமனுடன் அன்று அமர்ந்திருந்த பெண்ணான அன்னு தங்கர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது குறித்து டெல்லி சிறப்பு பிரிவு போலீஸின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “அன்னு தங்கர் ஹரியானாவின் ரோஹ்தக்கில் வசிப்பவர். பங்கர் கிங் உணவகத்தில் அமன் சுட்டுக்கொல்லப்பட்டதில் இவருக்கும் தொடர்பு உண்டு.

அமனுடன் நட்பினை வளர்த்துக்கொள்ள சமூக ஊடகங்களின் மூலம் அவரைத் தொடர்பு கொண்டு நட்பு பாராட்டியுள்ளார். அமன் சுட்டுக்கொல்லப்பட்ட போது பங்கர் கிங்-ல் அவருடன் இருந்துள்ளார். அக்டோபர் 24ம் தேதி அன்னு தங்கர், லக்கிம்பூர் கேரியில் உள்ள இந்தோ – நேபால் எல்லையில் இருப்பதாக சிறப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அவர் அங்கு கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

ஹோகானாவில் உள்ள மட்டு ராம் ஹல்வாய் கடையில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்திலும் அன்னுவுக்கு தொடர்பு இருப்பதாக தெரிகிறது. அதற்கு பின்பு ஹுமான்ஷு பாவ்-ன் அறிவுறுத்தலின் படி அமனுடன் நட்பு கொண்டுள்ளார். ஜூன் 18ம் தேதி அமன் பங்கர் கிங்-ல் தன்னை சந்திக்க வரும் தகவலை ஹுமான்ஷு பாவ்-க்கு தெரிவித்திருக்கிறார் அன்னு. அந்தச் சம்பவத்துக்கு பின்னர் அவர் பல்வேறு இடங்களுக்கு மாறி மாறிச் சென்று போலீஸாரிடமிருந்து தப்பித்து வந்தார்.

அக்டோர் 22ம் தேதி ஹுமான்ஷு பாவ், தற்போது விஷயம் தணிந்து விட்டதாகவும், தங்கியிருக்கும் விடுதியை காலிசெய்யும் படியும் அன்னுவிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் துபாய் வழியாக அமெரிக்கா செல்ல திட்டம் தீட்டப்பட்டது. இதற்காக ஹுமான்ஷு பாவ், அன்னு தங்கரை லக்கிம்பூர் கேரிக்கு வரச் சொல்லியிருக்கிறார். அங்கு அவரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்” என தெரிவித்தார்.