கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யண திருவிழாவில் இன்று காலை தேரோட்டம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேரை இழுத்தனர்.

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மண்டகப்படிதாரர்கள் சார்பில் காலையில் பல்லக்கிலும், மாலையில் பல்வேறு வாகனங்கள், சப்பரங்களிலும் அம்பாள் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவின் 9-வது நாளான இன்று காலை முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது.

இதையொட்டி அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 4 மணிக்கு திருவனந்தல் பூஜை நடந்தது. 4.30 மணிக்கு மேல் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. காலை 5.30 மணிக்கு அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் தேரோட்டம் தொடங்கியது. விழாவில், அறங்காவலர் குழு தலைவர் பி.எஸ்.ஏ.ராஜகுரு வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

விழாவில், வணிக வைசிய சங்க தலைவர் வெங்கடேஷ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் 4 ரதவீதிகளை சுற்றி காலை சுமார் 10.45 மணிக்கு நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து இன்று இரவு 8 மணிக்கு அன்ன வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகிறார். 11-வது திருநாளான அக்.28-ம் தேதி பகல் 1 மணிக்கு தபசு சப்பரத்தில் அம்மன் தபசுக்கு எழுந்தருளுகிறார்.

அன்று இரவு 7 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் பூவனநாதராக அம்மனுக்கு காட்சி கொடுக்கிறார். 12-வது நாளான 29-ம் தேதி இரவு 7 மணிக்கு சுவாமி – அம்மன் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கி.வெள்ளைச்சாமி மற்றும் மண்டகப்படிதாரர்கள், திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.