புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும், வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பொதுக் கணக்குக் குழு தலைவர், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா, முன்னிலையில், பொதுக் கணக்குக் குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் (போளுர்), ப.அப்துல் சமது (மணப்பாறை), ஐயப்பன் (கடலூர்), சந்திரன் (திருத்தணி), சேகர் (பரமத்திவேலூர;) ஆகியோர்களுடன், இன்று (25.10.2024) நேரில் பார்வையிட்டு களஆய்வு மேற்கொண்டு, அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
பின்னர், கு.செல்வப்பெருந்தகை தெரிவித்ததாவது; தமிழக அரசு பொது மக்களின் நலனுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், கிராமப்புறங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, ஏழை எளிய பொதுமக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தல், மாணாக்கர்களின் கல்வித் தரத்தினை மேம்படுத்துதல், பொதுமக்களுக்கு குடிமைப் பொருட்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு மக்கள்நல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றையதினம் புதுக்கோட்டை மாவட்டத்தில், மேற்கொள்ளப்பட்டுவரும், வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு களஆய்வு மேற்கொண்டு, அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அதன்படி, திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், திருவரங்குளத்தில், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுவரும் வீட்டின் கட்டுமானப் பணியினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்து, திருவரங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணாக்கர்களின் கற்றல், கற்பித்தல் திறன்கள் குறித்தும் மற்றும் மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், திருமலைராயசமுத்திரம் கூட்டுறவு நியாய விலைக் கடையில் நுகர்வோர்களுக்கு வழங்கப்படும் குடிமைப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு விவரங்கள் குறித்தும், பொற்பனைக்கோட்டையில் நடைபெற்றுவரும் அகழாய்வுப் பணிகள் குறித்தும், புதுக்கோட்டை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்க வளாகத்தில் கட்டப்பட்டுவரும் உள்விளையாட்டரங்க கட்டுமானப் பணிகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, நடைபெற்ற, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பொதுக் கணக்குக் குழு (2024 – 2025) ஆய்வுக் கூட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, உயர்கல்வித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை ஆகிய துறைகளின் அரசு உயர் அலுவலர்களிடம் தணிக்கைப் பத்திகள் குறித்து ஆய்வு நடைபெற்றது.
எனவே, அனைத்து துறை அரசு அலுவலர்களும், பொதுமக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் இத்தகைய வளர்ச்சி திட்ட பணிகளை உரிய முறையில் சிறப்பாக முடித்து, பொது மக்களிடம் விரைந்து கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்நிகழ்வுகளில், மேயர் திலகவதி செந்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் மரு.வை.முத்துராஜா (புதுக்கோட்டை), சின்னத்துரை (கந்தர்வக்கோட்டை), கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜராஜன், தனி மாவட்ட வருவாய் (காவிரி-வைகை-குண்டாறு) ரம்யாதேவி, சட்டமன்றப் பேரவை இணைச் செயலாளர் ரேவதி, துணை மேயர் லியாகத் அலி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, காங்கிரஸ் கட்சி மாநில பொதுச் செயலாளர் பெனட் அந்தோணிராஜ், முதன்மைக் கல்வி அலுவலர் சண்முகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜீவா, உதவிப் பிரிவு அலுவலர் விமலா, திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம.சுப்புராம், உதவி இயக்குநர் (தொல்லியல்துறை) தங்கதுரை, ஆலங்குடி வட்டாட்சியர் பெரியநாயகி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், நலதேவன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.