டானா புயல் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம் : தயார் நிலையில் மீட்பு குழுக்கள்

வங்கக் கடலில் உருவான டானா புயல் இன்று இரவு அல்லது நாளை அதிகாலையில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தில் பாதிக்கப்படும் இடங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

டானா புயல் கரையைக் கடக்கும் போது ஒடிசாவில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும், அதேபோல் மேற்கு வங்கத்தின் மேற்கு பகுதி மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடந்த பின்பு ஒடிசாவின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் புயலால் பெரும் பாதிப்பைச் சந்தித்திருப்பர் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

டானா புயல், பிதர்கனிகா தேசிய பூங்கா மற்றும் தாம்ரா துறைமுகத்துக்கு இடையில் நாளை அதிகாலையில் கரையைக் கடக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. என்றாலும் புயல் கரையைக் கடக்கும் நிகழ்வுகள் இன்று இரவில் இருந்தே தொடங்கிவிடும் என்றும் தெரிவித்துள்ளது.

புயல் கரையைக் கடக்கும் போது காற்று மணிக்கு 120 கிமீ வேகத்தில் வீசும். அதனால், இன்று இரவு முதல் நாளை காலை வரை கனமழை, காற்று மற்றும் இடி போன்றவை உச்சத்தில் இருக்கும்” என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் டி.ஜி. மிருத்யுஞ்செய் மோஹபத்ரா தெரிவித்துள்ளார். டானா புயல் கரையைக் கடக்கும் போது, ஒடிசா பல அபாயகரமான பாதிப்புகளைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடலில் அலைகள் 2 மீட்டர் உயரத்துக்கு எழும்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஒரு சக்திவாய்ந்த புயல் தாழ்வான பகுதிகளைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகயில் புயல் தாக்கும் பகுதிகளில் இருந்து சுமார் 1.1 மில்லியன் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதனிடையே மாநில அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்த ஒடிசா மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி, பாதிப்படலாம் என அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் இருந்து 30 சதவீத மக்கள் அல்லது 3 – 4 லட்சம் மக்கள் நேற்று மாலைக்குள் வெளியேற்றப்பட்டுவிட்டனர்” என்று தெரிவித்திருந்தார். பாதிக்கப்படும் இடங்களில் இருந்து மக்களை வெளியேற்றும் பணி இன்று காலையிலும் தொடர்ந்து நடைபெற்றது.

டானா புயல் காரணமாக ஒடிசாவின் பத்ராக் பகுதியில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இன்று மாற்றப்பட்டனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் திலிப் ரவுட்ராய் கூறுகையில், “பாதிக்கப்பட்டும் இடங்களில் இருந்து நாங்கள் மக்களை வெளியேற்றி வருகிறோம். சிலர் தாங்களாகவே முன்வந்து வெளியேறுகின்றனர். சிலர் தங்களின் வீடுகளில் இருந்து வெளியேற விரும்பாததால் அவர்களை போலீஸார் வெளியேற்றி வருகின்றனர்.

அதேபோல், டானா புயல் ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையைக்கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் இடங்களில் இருந்து 1.14 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

டானா புயலின் பாதிப்பினை எதிர்கொள்ளும் வகையில், ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, ராணுவம், கப்பற்படை மற்றும் கடலோர காவல் படைகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.

இன்று இரவில் இருந்து நாளைக்குள் டானா புயல் எப்போது வேண்டுமானாலும் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே புயல் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில், மனிதாபிமான உதவிகள் செய்வதற்காக இந்திய கடற்படை தயாரகி வருகிறது. நிவாரணப் பொருள்கள் மற்றும் மீட்பு குழுக்களை தாங்கிய படி கடற்படைக்குச் சொந்தமான இரண்டு கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்பதை இந்திய கடற்படை உறுதிபடுத்தியுள்ளது.

ஒடிசாவிலுள்ள மகாகல்பதா மற்றும் கேந்திரபாரா உள்ளிட்ட மாவட்டங்களில் டானா புயலின் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே டானா புயல் எச்சரிக்கை காரணமாக இன்று மாலை முதல் நாளை மாலை வரை ஒடிசா மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.