கோவை ஒத்தக்கால் மண்டபம் அருகே அரசுப் பேருந்து தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி அரசுப்பேருந்து ஒன்று இன்று வந்து கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநர் பொள்ளாச்சியை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஓட்டி வந்தார். நடத்துநராக பொள்ளாச்சியை சேர்ந்த கதிரேசன் என்பவர் பணியில் இருந்தார். இப்பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
இப்பேருந்து காலை 8 மணியளவில் மயிலேறிபாளையத்தை கடந்து ஒத்தகால் மண்டபம் பாலம் நோக்கி வந்த போது பேருந்தின் இன்ஜின் பகுதியில் இருந்து புகை வந்தது. அதைப் பார்த்த ஓட்டுநர் அதிர்ச்சியடைந்து பேருந்தை ஓரமாக நிறுத்தினார். அதைத் தொடர்ந்து பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கினர். அடுத்த சில நிமிடங்களில் பேருந்தில் தீப்பிடித்தது. சாலையில் பேருந்து கொளுந்து விட்டு எரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் செட்டிபாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பேருந்தில் பிடித்த தீயை அணைக்க முயன்றனர். சில மணி நேரம் போராடி பேருந்தில் பிடித்த தீ அணைக்கப்பட்டது. இதில் பேருந்து முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இச்சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் போலீஸார் விசாரிக்கின்றனர்.