“ஆந்திரா, தெலங்கானா போல் தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் நிகழும்” – சி.விஜயபாஸ்கர் கணிப்பு

ஆந்திரா, தெலங்கானாவில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது போல், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் நிகழும் என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் மேச்சேரியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசினார். இதில் மேச்சேரி மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வம், பேரூர் செயலாளர் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியது: “சமீபத்தில் சேலம் மாவட்டத்தில் திமுக இளைஞரணி கூட்டம் பல கோடி ரூபாய் செலவில் நடந்தது. இறுதியாக உதயநிதி பேசும்போது, கூட்டத் திடலின் கடைசிப் பகுதியில் சீட்டு காலியாகி, சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். இது தான் திமுக கட்சி.

களத்துக்குச் சென்று வாக்குக் கேட்காமல், மருத்துவமனையில் படுத்துக்கொண்டே, வெற்றி பெற்ற ஒரே தலைவர் எம்ஜிஆர் தான். சாதாரண கட்சியில் இல்லை, அப்படிப்பட்ட மகத்தான கட்சியில் இருப்பது நமக்கு பெருமை. அதிமுகவில் கிளைச் செயலாளர்கள் தான் கட்சியின் ஆணிவேர்கள். சாதாரண கிளைச் செயலாளர் எனக் கூற வேண்டாம். இல்லாத கட்சியில் மாவட்டச் செயலாளராக இருப்பதை விட, அதிமுக கட்சியில் கிளைச் செயலாளர் என பெருமையாகச் சொல்ல வேண்டும்.

மழை எப்போது வரும் என யாராலும் சொல்ல முடியாது. சூரியன் வெளிச்சமாகத் தான் இருக்கும். ஆனால், திடீரென்று மேகம் வந்து மறைத்து விடும். அதேபோல், 2026-ம் ஆண்டு திமுகவை வீழ்த்தி அதிமுக ஆட்சி அமைக்கும். நடிகர்கள் கட்சி ஆரம்பிக்கலாம், ஆனால், எம்ஜிஆரால் ரசிகர் மன்றம் தொடங்கி, கட்சியை உருவாக்கி, ஆட்சியை பிடித்த கட்சி அதிமுக.

2026-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல். ஒன்று அல்லது இரண்டு மாதத்திற்கு முன்னதாக கூட ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளம் ஏற்படும். ஆந்திரா, தெலங்கானாவில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது போல், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் நிகழும். 5 ஆண்டுகள் கூட தாக்குப்பிடித்து ஆட்சி நடத்துவதற்கான வாய்ப்பு திமுகவுக்கு இல்லை. எடப்பாடி பழனிசாமி என்ற மாலுமி வழிநடத்தக் கூடிய அதிமுக கப்பல், 2026-ம் ஆண்டு கரையைக் கடந்து ஆட்சியை அமைக்கும்” என்று சி.விஜயபாஸ்கர் பேசினார்.