மழை காரணமாக வேகமாக நிரம்பி வரும் காட்டுமன்னார்கோவில் வீராணம் ஏரியை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் .
கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீர் ஆதாரமாக இருப்பது காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி ஆகும். இந்த ஏரி மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி வட்டப் பகுதியில் 44 ஆயிரத்து 856 ஏக்கர் பாசனம் பெறுகின்றன. இதன் மூலம் இப்பகுதி விவசாய மற்றும் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடியாகும். காவிரி தண்ணீர் கீழணையில் இருந்து வடவாறு வழியாக ஏரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஏரி நிரப்பப்படும். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கடலூர் மாவட்ட பகுதிகளும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிக்கு காட்டாறுகள் மூலம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழணையில் இருந்து வடவாறு மூலமாகவும் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரி நிரம்பி முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வீராணம் ஏரியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சிதம்பரம் நீர்வளத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.