காஷ்மீரில் புலம்பெயர்ந்த தொழிலாளி தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பிஹாரில் இருந்து புலம்பெயர்ந்து வந்த தொழிலாளி ஒருவர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. காயங்களுடன் இருந்த தொழிலாளியின் உடலை சாலையோரத்தில் இருந்து உள்ளூர்வாசிகள் இன்று கண்டெடுத்து உள்ளனர்.

தொழிலாளியின் உடல் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் நடந்த பகுதிக்கு இந்திய ராணுவத்தினரும் ஜம்மு காஷ்மீர் போலீஸாரும் உடனடியாக விரைந்து சென்றனர். இந்த மரணம் குறித்து விசாரணை நடத்தினர். ஜம்மு காஷ்மீரின் புதிய முதல்வராக தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லா பதவியேற்ற இரண்டு நாளில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரைச் சேராதவர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்படுவது அந்தப் பகுதியில் கவலைக்குரிய விஷயமாக மாறி வருகிறது. ஏப்ரல் மாதத்தில் வெளியூரைச் சேர்ந்த இரண்டு புலம்பெயர் தொழிலாளிகள் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த மாதத்தின் தொடக்கத்தில், ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில், தீவிரவாதிகளால் கட்டத்தப்பட்ட ராணுவ வீரரின் உடல் குண்டு காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டதாக அக்.9-ம் தேதி போலீஸார் தெரிவித்தனர்.

இந்திய ராணுவமும் ஜம்மு காஷ்மீர் போலீஸாரும் இணைந்து அனந்த்நாக் பகுதியில் அக்.8-ம் தேதி நடத்திய தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது, அனந்த்நாக் வனப்பகுதியில் பிராந்திய ராணுவப்பிரிவு 161 சேர்ந்த இரண்டு வீரர்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். என்றாலும் அவர்களில் ஒருவர் காயங்களுடன் தப்பித்து வந்தது நினைவுகூரத்தக்கது.