“இளைஞர்களிடையே பக்தி குறைந்ததால் தான் பருவம் தவறிய மழை தமிழகத்தில் பொழிகிறது” – மதுரை ஆதீனம் 

“தமிழகத்தில் இன்றைக்கு பருவம் தவறிய மழை பொழிவதற்கு இளைஞர்களிடையே பக்தி குறைவாக இருப்பது தான் காரணம்,” என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் 225-வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு மதுரை ஆதீனம் இன்று மாலை அணிவித்து மரியாதை செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “இன்றைய தலைமுறைகள் சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்த வேண்டும். இளைஞர்களும் விடுதலைப் போராட்ட தியாகிகளை நினைவுகூரும் வகையில் அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து மதுரை ஆதினம் சார்பாக விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு உரிய மரியாதை செலுத்தி வருகிறேன் அவர்கள் இல்லை என்றால் நான் இன்று இல்லை. தமிழகத்தில் இன்றைக்கு பருவம் தவறிய மழை பொழிவதற்கு இளைஞர்களிடையே பக்தி குறைவாக இருப்பது தான் காரணம். கோயில் நிலங்களில் குத்தகைதாரர்கள் குத்தகைத் தொகையை ஒழுங்காகச் செலுத்துவதில்லை” என்று மதுரை ஆதீனம் கூறினார். தொடர்ந்து, நடிகர் விஜய் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்காமல், ஆதீனம் உடனடியாக அங்கிருந்து நகர்ந்து சென்றார்.