லால்குடி ஸ்ரீ நாட்டியாலயா ஆர்ட்ஸ் அகாடமி 12வது சலங்கை பூஜை விழா

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பூவாளுர் ராஜ் பேலஸ் திருமண மண்டபத்தில் ஸ்ரீ நாட்டியாலயா ஆர்ட்ஸ் அகாடமி 12வது சலங்கை பூஜை விழா நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக திருச்சி கலை காவிரி நுண்கலைக் கல்லூரி இணை பேராசிரியர் டாக்டர் எஸ்.சாராள், லால்குடி ஏகன் மெடிக்கல் சென்டர் டாக்டர் விஜயசேகரன், ஏகன் மெடிக்கல் சென்டர் நிர்வாக இயக்குனர், டாக்டர் அனுஷா, சுற்றுச்சூழல் ஆர்வலர் சைமன், சமூக ஆர்வலர் பல்லபுரம் முருகானந்தம், நாட்டிய குரு ஸ்டெல்லா பவானந்த், நிகழ்ச்சியை வசந்தாதேவி தொகுத்து வழங்க பொதுமக்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் விருந்து உபசரிப்பு நடைபெற்றது.

மாணவிகள் ஸ்டெசிமரியா, சங்கமித்ரா, கயல்மித்ரா, ரவீனாஷாலி, நக்க்ஷத்ரா, கமலிதேவி, ஜெயஸ்ரீ ஆராதனா சிறப்பாக நடனம் ஆடினார்கள். சிறப்பு விருந்தினர் டாக்டர் சாராள் இணை பேராசிரியர் சிறப்புரை: இந்திய நடனக் கலையின் தோற்றமானது தொன்மையான பழங்காலத்தின் சமயம்,  புராணம் மற்றும் கலை ஆகியவற்றோடு ஆழமான தொடர்புடையது. சிருஷ்டி கர்த்தாவாகிய பிரம்மா நான்கு வேதங்களாகிய ரிக் வேதத்தில் இருந்து பாடம், யஜுர் வேதத்திலிருந்து  அபிநயம், சாம வேதத்திலிருந்து கீதம் மற்றும் அதர்வண வேதத்திலிருந்து காப்பியச் (சுவை) ஆகிய நான்கையும் இணைத்து ஐந்தாம் வேதமாக  நாட்டிய வேதத்தை உருவாக்கினார்.

இந்த நடன கலையானது கட்டுப்பாடான வாழ்வும், செல்வாக்கும், மகிழ்ச்சியும் மற்றும் மோட்சத்தையும் பெற்றுத் தரக்கூடியதாக இருக்கிறது.மேலும் இக்கலை புகழ், தன்னம்பிக்கை,  நற்பேறு மற்றும் திறமை ஆகியவை அதிகரிக்க உதவுகிறது. இதை தவிர அமைதி, பொறுமை, சுதந்திரம் மற்றும் சந்தோஷத்தையும் அளிக்கிறது. மேலும் துன்பம்,பாதிப்பு, வருத்தம் மற்றும் மனச்சோர்வு அண்டாமல் காக்கிறது. கலை என்பது கடவுள் மனிதனுக்கு கொடுத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகும். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒவ்வொரு திறமை ஒளிந்து கொண்டிருக்கும் அதை நாம் முயற்சி செய்து பயன்படுத்தி வெளிக்கொணரும் விதத்தில் தான் நம் திறமை உலகுக்கு புலப்படும். அந்த வகையில் ஸ்ரீ நாட்டியாலயா ஆர்ட்ஸ் அகாடமி நிறுவனர் ஸ்டெல்லா பவானந்த் 12வது சலங்கை பூஜையை மிகச் சிறப்பாக 8 மாணவிகளுக்கு கற்றுத்தந்து மிகச் சிறப்பாக உருவாக்கியுள்ளார்கள். சிற்பியாக இருந்து மாணவிகளை சிலையாக வடித்து எடுத்து இருக்கிறார் அவர்களுக்கு மனதார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடன மார்க்கமாக புஷ்பாஞ்சலி, அலாரிப்பு, முருகன் கௌத்துவம், சின்னஞ்சிறு பெண் போலே பதம், தீன கருணாகரனே கீர்த்தனை,சின்ன கண்ணன் தீராத விளையாட்டுப் பிள்ளை, காவடிச்சிந்து, சம்போ மகாதேவா என்று ஒன்பது நடன மார்க்கங்களை மாணவிகளுக்கு கற்று தந்துள்ளார். அற்புதமான முறையில் மாணவிகளும் மிக அழகாக தங்களது பாவம், அபிநயம் ,அரைமண்டி, அங்க சுத்தம் என நடனத்துக்கு உரித்தான அனைத்து சிறப்பு அம்சங்ககளுடன் ஆடினார்கள். மாணவிகளுக்கு உடை அலங்காரங்கள், அரங்க வடிவமைப்பு, நடனத்துக்கு உரித்தான சிறப்பு அம்சங்கள் அனைத்தும் மிகச்சிறப்பான மிக அற்புதமான முறையில் அமைந்திருந்தது. நடனத்துக்கு தொகுத்து வழங்கிய விதம் நடன நிகழ்ச்சியை மேன்மைப்படுத்தும் விதத்தில் இருந்தது. நாட்டியத்திற்கு பாடியவர்கள், பக்கவாத்திய இசைக் கருவிகளை வாசித்தவர் ஆகிய இசைக்கருவிகளை வாசித்த விதம் அரங்கத்தை வைப்ரேஷனாகவும், புத்துணர்ச்சியை கொடுக்கக் கூடியதாக இருந்தது.

குழந்தைகள் தெய்வீகமான பரதக்கலையும், இசைக்கலையும் கற்கும் பொழுது இந்த சமுதாயத்தில் தன்னம்பிக்கையுடனும் படிப்பில் புத்திக் கூர்மையுடனும் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நெறியிலும் உடல் ஆரோக்கியத்திலும், பக்தியிலும் சிறந்து விளங்குகிறார்கள் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். லால்குடிக்கே பெருமை சேர்க்கும் வகையில் ஸ்ரீ நாட்டியாலயா ஆர்ட்ஸ் அகாடமி விளங்குகிறது. என்பதை மனதார வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஜாதி மத வேதங்களை கடந்து அனைவரையும் ஒன்று சேர்க்கும் பாலமாக இசைக்கலையும், நடனக்கலையும் சிறந்து விளங்குகிறது. பெற்றோர்களை இந்த நேரத்தில் மனதார வாழ்த்துகிறேன்.

நீங்கள் கண்ட கனவை உங்களுடைய குழந்தைகள் நிஜமாக்கி உள்ளார்கள். உங்கள் குழந்தைகளுக்கு நல்ல ஒரு பாரம்பரிய கலையையும், தொழிற்கல்வியாக கற்றுக்கொள்ள ஊக்கமளித்து அவர்களை வழி நடத்தியும் இருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் குழந்தைகள் இந்த சமுதாயத்தில் சிறந்த கலைஞர்களாகவும் சிறந்த மனிதநேயம் கொண்டவர்களாகவும் இவ்வுலகை வலம் வருவார்கள். ஸ்ரீ நாட்டியாலயா ஆர்ட்ஸ் அகாடமி நிறுவனத்தின் குரு, மாணவர்கள், பெற்றோர்கள் இவற்றில் பணி புரியும் ஆசிரியர்கள், அனைவருக்கும் அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம், நீண்ட ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ்,மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க வளமுடன் என்று வாழ்த்தி வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன் என்று தனது உரையில் கூறினார்.

சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட அனைவருமே மிக சிறப்பாக அடுத்த தலைமுறையினர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உற்சாகம் அளிக்கும் வகையில் பாரம்பரிய கலைகளை விளக்கியதற்கு கலந்து கொண்ட மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் பாராட்டுகளையும் மகிழ்ச்சியும் இணை பேராசிரியருக்கு தெரிவித்துக் கொண்டனர்.