சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட யானைகவுனி பகுதியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

சென்னையில் கனமழை நீடித்து வரும் நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட யானைகவுனி பகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோர மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னையின் பிரதான சாலைகள், குடியிருப்புகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆய்வின்போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் சென்னை பொறுப்பு அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

இந்நிலையில், வடசென்னை பகுதிகளான வால்டாக்ஸ் சாலை, யானைகவுனி, மூலக்கொத்தளம், பேசின் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களையும், அங்கு நடைபெற்று வரும் பணிகளையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். மழைநீர் வடிகால் பணிகளின் நிலை மற்றும் வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கால்வாய் சீரமைப்பு பணிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.