சாதிவாரி கணக்கெடுப்புகளை உடனடியாக நடத்தி உரிய இட ஒதுக்கீடுகளை வழங்க வேண்டும் : வேல்முருகன்

சாதிவாரி கணக்கெடுப்புகளை உடனடியாக நடத்தி, வேலை வாய்ப்பு, கல்வி ஆகியவற்றில் உரிய இட ஒதுக்கீடுகளை வழங்க தமிழக முதல்வர் முன்வர வேண்டும், என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தென் மண்டல செயற்குழு கூட்டம் இன்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த தமிழக வாழ்வுரிமைக்கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்ட முடிவில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில தலைவர் வேல்முருகன், எம்.எல்.ஏ.-செய்தியாளர்களிடம் கூறியதாவது: சாதிவாரி கணக்கெடுப்புகளை உடனடியாக நடத்தி வேலை வாய்ப்பு கல்வி ஆகியவற்றில் உரிய இட ஒதுக்கீடுகளை வழங்க முதல்வர் முன்வர வேண்டும். சாம்சங் தொழிலாளர்கள் சங்கத்தை தமிழக தொழிலாளர் ஆணையம் பதிவு செய்ய வேண்டும். சாம்சங் நிர்வாக தொழிலாளர்களுடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுதுணையாக நின்று போராடும்.

நீதிமன்ற உத்தரவு என்ற பெயரில் நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக் கூறி பல ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு மாற்று இடம் கொடுக்காமல் அவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது.
கொடைக்கானல் பகுதியில் 150 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மாற்று வீடுகள், இடங்கள் தரப்படவில்லை. மணல் மாபியாக்களுக்கு துணை போகும் அரசு அதிகாரிகளை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழ்நாட்டில் வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதால் வருங்கால சங்ததிகள் பாதிக்கப்படும்.

தமிழக காவல்துறை குற்றங்களை இரும்பு கரங்கள் கொண்டு அடக்கி வருகிறது. கைது செய்யப்படுபவர்கள் என்கவுண்டர் என்ற பெயரில் சுடுவது மனித உரிமை மீறல். தமிழகத்தில் எல்லா குற்றங்களுக்கும் காரணமாக இருப்பது மதுபானங்கள். தமிழகத்தில் ஆண்டுக்கு 1000 மதுபான கடைகளை திமுக அரசு மூட வேண்டும். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே சென்னையில் ஒருவர் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். தமிழ்நாட்டில் மழை நீரை சேகரிக்க தடுப்பணைகள் இல்லை. தமிழகத்தில் பல்லாயிரம் டிஎம்சி தண்ணீர் கடலில் கலக்கிறது.

ஏற்கெனவே மின்சார கட்டணம் இரண்டு முறை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் உயர்வு என்பதை தமிழக மக்கள் தாங்கிக் கொள்ள முடியாது. அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறையில் இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். செந்தில் பாலாஜி ஆக இருந்தாலும் சரி, விஜயபாஸ்கர் ஆக இருந்தாலும் சரி குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.

அதிமுக ஆட்சியின் முடிவில் 5 லட்சம் கோடியாக இருந்த அரசின் கடன், தற்போது 9 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. நிதிநிலைகளை சரி செய்து தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வேல்முருகன் கூறினார்.