ராணிப்பேட்டை சிப்காட் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று திடீர் ஆய்வு நடத்தினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அருகே மணியம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட ராஜிவ்காந்தி நகரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த 96 மாணவ – மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு முதல்வரின் காலை உணவு திட்டத்தில் மொத்தம் 53 மாணவ – மாணவியர் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்தப் பள்ளியில் இன்று காலை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது பள்ளியில் உள்ள எண்ணும் எழுத்து வகுப்பறை, காலை உணவு திட்டம், பள்ளியின் சுற்றுப்புற சூழல், ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை, கழிவறைகள், காலை உணவுத் திட்ட சமையல் அறை மற்றும் பள்ளி மாணவர்கள் உணவு சாப்பிடும் அறை உட்பட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்த அமைச்சர், காலை உணவு திட்டத்தின் மூலம் மாணவர்கள் உணவருந்து வதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், பள்ளியின் சுற்றுப்புறம் தூய்மையாக இருந்தது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ஜோஸ்வாவிடம் கேட்டறிந்தார். கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் துறை அதிகாரிகள் யாரும் உடன் இல்லாமல் திடீரென பள்ளியில் ஆய்வு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.