உறுப்பினர் சேர்க்கை மந்தமாக இருப்பதால் அலட்சியம் காட்டாதீர் என புதுச்சேரி பாஜக எம்எல்ஏ-க்களிடம் மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா அறிவுறுத்தினார்.
நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. புதுவை மாநிலத்தில் 2 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது. புதுவையில் முதல்கட்ட பாஜக உறுப்பினர் சேர்க்கையை மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து 2-வது கட்டமாக உறுப்பினர் சேர்க்கையை ஆந்திர மாநில பாஜக தலைவர் புரந்தேஸ்வரி எம்.பி தொடங்கி வைத்தார். அப்போதே உறுப்பினர் சேர்க்கையை வேகப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
ஆனாலும், இதுவரை 52 ஆயிரம் பேர் மட்டுமே உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. புதுச்சேரி பாஜக எம்எல்ஏ-க்கள் சிலர் உறுப்பினர் சேர்க்கையில் பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. இது தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்த மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா இன்று புதுவைக்கு வருகை தந்தார். பாஜக கட்சி அலுவலகத்தில் அவர் எம்எல்ஏ-க்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பாஜக மாநில தலைவர் செல்வகணபதி எம்பி, அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்சரவணக்குமார், எம்எல்ஏ-க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ராமலிங்கம், ரிச்சர்டு, அசோக்பாபு, வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் இந்த ஆலோனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது நிர்மல்குமார் சுரானா, “நிர்ணயித்த இலக்கை எட்டும் வகையில் உறுப்பினர் சேர்க்கையை உத்வேகப்படுத்த வேண்டும். இதில் அலட்சியம் காட்டக்கூடாது. ஒவ்வொரு எம்எல்ஏ-வும் குறைந்த பட்சம் 5 ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். எம்எல்ஏ இல்லாத தொகுதியில் 3,500 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
அப்போது, எம்எல்ஏ-க்கள் தாங்கள் எதிர்பார்த்த வாரியத் தலைவர் பதவிகள் உள்ளிட்ட சில கோரிக்கைகளை கட்சி தலைமை நிறைவேற்றவில்லை என்றும் அதில் அக்கறை காட்ட வேண்டும் என்றும் நிர்மல் குமார் சுரானாவிடம் வலியுறுத்தியுள்ளனர்.