சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் கடல் மட்டத்திலிருந்து 3,500 அடி உயரத்தில் சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தகிரி ஆகிய நான்கு மலைகளுக்கு நடுவே காயகல்ப மூலிகைகள் நிறைந்த சஞ்சீவிகிரி என்று அழைக்கப்படும் சதுரகிரி மலை உள்ளது.
சதுரகிரியில் பிரசித்திபெற்ற சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு அகத்தியர், போகர், கோரக்கர் முதலான 18 சித்தர்கள் தவம் புரிந்ததாகவும், இன்றும் சித்தர்கள் பல்வேறு ரூபங்களில் வந்து வழிபாடு நடத்துவதாகவும் ஐதீகம்.
இங்கு மாதம் தோறும் பிரதோஷம், பவுர்ணமி அமாவாசை மற்றும் முக்கிய விழா காலங்களில் மட்டும் பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று மஹாளய அமாவாசையை முன்னிட்டு 10 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி, 18 சித்தர்களுக்கு மஹாளய அமாவாசை முன்னிட்டு மாலை 6 மணிக்கு மேல் 32 வகையான அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
மஹாளய அமாவாசையை முன்னிட்டு இன்று சதுரகிரி மலையில் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோயிலின் பரம்பரை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் அமாவாசை வழிபாடு மற்றும் பூஜைகளுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.