“தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “லெபனான் நாட்டில் செயல்படும் பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவனான ஹசன் நஸ்ரல்லா இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், பயங்கரவாதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னை மிர்சாகிப் பேட்டை பள்ளிவாசல் முன்பு பேனர் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இது கடும் கண்டனத்திற்குரிய செயலாகும்.
1992 ஆம் ஆண்டு முதல் லெபனானில் பல பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய பயங்கரவாதி மறைவிற்கு மதக் கலவரத்தை தூண்டும் வகையில் வாசகங்களுடன் சென்னையில் பேனர் வைக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி மற்றும் அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய செயலாகும். இச்செயலை செய்தவர்களை தமிழக அரசும் உளவுத்துறையும் உடனடியாக கைது செய்து விசாரிக்க வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் மீர் சாகிப் பேட்டைக்கு அருகில் உள்ள ராயப்பேட்டையில் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்ப் -உத் -தஹீர் அமைப்புக்கு ஆட்களை சேர்த்து பயிற்சி மையம் அமைத்த செய்தி அம்பலமானதை அடுத்து தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.
இதைத்தொடர்ந்து ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளுக்கு ஆதரவான நபர்கள் இந்த பகுதியில் இருக்கலாம் என விசாரணை நடைபெற்று வருகிறது. மசூதி வாசலில் இஸ்லாமிய பயங்கரவாதிக்கு அஞ்சலி பேனர் வைக்கப்பட்டுள்ளது என்றால் ஜமாத்தின் ஆதரவு இல்லாமல் செய்திருக்க வாய்ப்பில்லை. எனவே மசூதியை நிர்வகிக்கும் ஜமாத் நிர்வாகிகளையும் காவல்துறை நுண்ணறிவு பிரிவு கண்காணிக்க வேண்டடியது அவசியமென தோன்றுகிறது.
உலகத்தின் எந்த நாட்டில் பயங்கரவாத செயல்கள் நடந்தாலும் அதில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள சில அமைப்புகள் செயல்படுகின்றன. அதுமட்டுமன்றி வெளிநாடுகளில் பயங்கரவாதிகள் கொல்லப்படும் போது அதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு குரல் தமிழகத்திற்கு நல்லதல்ல. 2011 ஆம் ஆண்டு ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட போது சென்னையில் உள்ள மசூதியில் தொழுகை நடந்தது குறிப்பிடத்தக்கது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு ஆள் சேர்க்கும் நிகழ்வுகளும் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதை ஆரம்பத்திலேயே தமிழக ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளாத காரணத்தினால் ஏற்கனவே சார்பு ஆய்வாளர் வில்சன் உட்பட பல உயிர்களை இழந்துள்ளோம். 2014 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் என அச்சிடப்பட்ட டி ஷர்ட் அணிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அவர்களது இருபதுக்கும் மேற்பட்ட சமூக வலைத்தள கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் சிறுவர்கள் என்ற காரணத்திற்காக விடுவிக்கப்பட்டனர்.
2019 ஆம் ஆண்டு இலங்கை தலைநகர் கொழும்பில் தேவாலயத்தில் நடைபெற்ற மாபெரும் குண்டு வெடிப்பு நிகழ்த்திய பயங்கரவாதிகளுக்கும் தமிழகத்தில் உள்ள பயங்கரவாதிகளுக்கும் உள்ள தொடர்பு கண்டறியப்பட்டது. அவர்களது அலைபேசி உரையாடல்களும் கண்டுபிடிக்கப்பட்ட பின்பும் கூட பயங்கரவாதிகள் மிக சுலபமாக தமிழகத்தில் சுற்றி திரிந்து வருவதாக சொல்லப்படுகிறது..
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலஸ்தீன இஸ்ரேல் போர் நடைபெற்ற போது சில முஸ்லிம் அமைப்புகள் பாலஸ்தீன கொடியுடன் தமிழகத்தின் பல பகுதிகளில் வலம் வந்தனர். இதையும் தமிழக உளவுத்துறை கவனிக்க தவறியது. அதேபோல கர்நாடகாவில் நடைபெற்ற ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பிற்கும் தமிழகத்தில் உள்ள பயங்கரவாதிகளோடு நெருங்கிய தொடர்பு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. என்.ஐ.ஏ. இவர்களை எல்லாம் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தது. ஆனால் தமிழக உளவுத்துறையோ உறங்கிக் கொண்டிருந்தது.
பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் நபர்களை கவனிக்க தவறியதால் தான் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி வருவது கண்கூடு. மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜிவாஹிருல்லா பாலஸ்தீனத்தில் கொல்லப்பட்ட ஹசன் நஸ்ருல்லாவிற்கு போராளிகள் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று பேசி உள்ளதையும் இந்து முன்னணி பேரியக்கம் வன்மையாக கண்டிக்கிறது. அனைத்து மதத்தினரும் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பேசுவதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறதா ? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் .
“மண்டியிட்டு வாழ்வதை விட சத்தியத்திற்காக நிமிர்ந்து நின்று மடிவது மேல்” என்ற வாசகங்களுடன் இறந்து போன பயங்கரவாதிக்கு சென்னையில் பேனர் வைத்தவர்கள் யார் ? அவர்களது பின்னணி என்ன என்பதைப் பற்றியும் முழுமையாக தமிழக அரசும் உளவுத்துறையும் விசாரிக்க வேண்டும் .அவர்களுக்கு ஆதரவாக யார் பேசினாலும் அவர்களையும் கைது செய்ய வேண்டும். இனி இது போன்ற பயங்கரவாத ஆதரவு சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது” என்று காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.