பிரதமர் நரேந்திர மோடி குறித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கருத்து முற்றிலும் வெறுக்கத்தக்கது, அவமானகரமானது என்று பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் நேற்றைய பேச்சு, முற்றிலும் வெறுக்கத்தக்கதாகவும், அவமானகரமானதாகவும் இருந்தது. இவ்விஷயத்தில் அவர், தனது கட்சித் தலைவர்களையும், கட்சியையும் விட விஞ்சிவிட்டார்.
அவரது பேச்சில் வெறுப்பின் கசப்பு வெளிப்பட்டது. பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றிய பிறகுதான் தான் இறப்பேன் என்று கூறி தேவையில்லாமல் தனது தனிப்பட்ட உடல்நல விஷயங்களில் பிரதமர் மோடியை இழுத்துள்ளார். பிரதமர் மோடி மீது காங்கிரஸுக்கு எவ்வளவு வெறுப்பும் அச்சமும் இருக்கிறது என்பதையும், அவர்கள் எவ்வாறு பிரதமர் மோடி குறித்தே தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் இது காட்டுகிறது.
கார்கே, ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வழ வேண்டும் என்று அவருக்காக பிரதமர் மோடி பிரார்த்திக்கிறார், நான் பிரார்த்திக்கிறேன், நாங்கள் எல்லோருமே பிரார்த்திக்கிறோம். அவர் பல்லாண்டு காலம் வாழட்டும், 2047க்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா உருவாகும் வரை வாழட்டும்” என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் நேற்று (செப். 29) நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அதன் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே (83) கலந்து கொண்டார். மேடையில் அவர் பேசிக்கொண்டிருந்தபோது, அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
உடனே அருகில் இருந்த காங்கிரஸ் தொண்டர்கள் உதவிக்கு ஓடினர். தண்ணீர் குடித்ததும் இயல்பு நிலைக்கு திரும்பிய கார்கே மேடையில் தனது பேச்சை தொடர்ந்தார். விரைவாக அவர் தனது உரையை முடித்துக் கொண்டார். அவரை காங்கிரஸ் தொண்டர்கள் இருக்கைக்கு அழைத்துச் சென்று அமரச்செய்தனர்.
அப்போது கார்கே கூறுகையில், “காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கிடைக்க நாம் போராடுவோம். எனக்கு 83 வயது ஆகிறது. நான் விரைவில் இறக்க மாட்டேன். பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை நான் உயிரோடு இருப்பேன்” என்றார். கார்கேவின் இந்த பேச்சுக்கு அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.