“தேர்தல் ஆணையம், புலனாய்வுத் துறை, அமலாக்கத் துறை, நீதிமன்றங்கள் உள்ளிட்ட இந்த அமைப்புகளை முடக்கி பாஜக அரசு தனதாக்கிக் கொண்டது. எனவேதான் பிணையில் கூட வெளிவர முடியாமல் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டார். இப்போதாவது பிணை கிடைத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. பிணையில் விடுவிக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.” என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை, உச்ச நீதிமன்றம் பிணையில் விடுவித்து இருக்கிறது. அவர் மீது வலிந்து சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு, விசாரணை நிலையிலிருக்கும் போதே 15 மாத காலம் சிறை வைக்கப்பட்டு இருக்கிறார். எதிர்க்கட்சிகளை முடக்கி வைப்பதற்கு பாஜக அரசு எந்த எல்லைக்கும் செல்லும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
குறிப்பாக தேர்தல் நேரங்களில், களப்பணிகளில் சிறப்பாக செயல்படும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களை, மக்களிடமிருந்து பிரித்து ஒதுக்கி தனிமைப்படுத்த ஏதேனும் குற்றம் சுமத்தி சிறையில் அடைப்பதை பாஜக ஒரு உத்தியாகவே கையாண்டு வருகிறது. அரசியலமைப்புச் சட்டப்படி, ஆட்சி நிர்வாகம் சரியாக நடக்கிறதா என்பதை கண்காணிக்க, சுயேட்சையான ஜனநாயக நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையம், புலனாய்வுத் துறை, அமலாக்கத் துறை, நீதிமன்றங்கள் உள்ளிட்ட இந்த அமைப்புகளை முடக்கி பாஜக அரசு தனதாக்கிக் கொண்டது. எனவேதான் பிணையில் கூட வெளிவர முடியாமல் அமைச்சராக இருந்த அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இப்போதாவது பிணை கிடைத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. பிணையில் விடுவிக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது” என்று இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.