விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள பட்டாசு ஆலை ஒன்றில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.
சாத்தூர் அருகே குகன்பாறையில், சிவகாசியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான உரிமம் பெற்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு வழக்கம் போல் பட்டாசுக்கான ரசாயன மூலப்பொருள் கலவை செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ரசாயன மூலப்பொருட்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில், பட்டாசு ஆலையின் ஒரு அறை முழுமையாக தரைமட்டமானது. இந்த விபத்தில், ரசாயன பொருட்களை இறக்கி வைக்கச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் கோவிந்த ராஜ் (24) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பணியில் இருந்த குரு மூர்த்தி பாண்டியன் (19) என்ற தொழிலாளி 90 சதவீத தீக்காயம் அடைந்தார்.
தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினரும் போலீஸாரும் கோவிந்த ராஜை மீட்டு சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஏழாயிரம் பண்ணை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.