ராகுல் காந்திக்கு எதிராக கடுமையாகப் பேசிய பாஜக மற்றும் சிவ சேனா தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி காவல்துறையில் புகார் அளித்துள்ளது.
அக்கட்சியின் பொருளாளரும், பொதுச் செயலாளருமான அஜய் மாக்கன், டெல்லி துக்ளக் சாலை காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்தார். ராகுல் காந்திக்கு எதிராக கடுமையாகப் பேசிய பாஜக தலைவர்கள் தர்விந்தர் சிங் மார்வா, ரவ்நீத் சிங் பிட்டு, ரகுராஜ் சிங், சிவ சேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் ஆகியோர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகார் அளிக்கப்பட்டதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அஜய் மாக்கன், “மறைந்த இந்திரா காந்தி மற்றும் மறைந்த ராஜீவ் காந்தி ஆகியோர் நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தவர்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதன் பிறகும் இதுபோன்ற மிரட்டல்களை அவர்கள் விடுக்கிறார்கள். இந்திய அரசியலை இதைவிட கீழ் நிலைக்கு தள்ள முடியாது.
வெறும் ஒரு பாஜக தலைவர் மட்டுமல்ல, பல தலைவர்கள் இதுபோன்ற கருத்துக்களைச் சொன்னார்கள். ஆனால் பாஜக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ராகுல் காந்தி எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பழங்குடியினர் மற்றும் சிறுபான்மை மக்களுக்காகப் பேசுகிறார். அதனால்தான் பாஜகவினர் அவருடைய வார்த்தைகளை விரும்பவில்லை. அதனால் தான் அவரை மிரட்டுகின்றனர். ஆனால் நான் உங்களுக்கு சொல்கிறேன் – இது காங்கிரஸ் கட்சி, நாங்கள் பயப்படவோ அஞ்சவோ மாட்டோம்” என தெரிவித்தார்.
அஜய் மாக்கன் அளித்துள்ள புகார் மனுவில், “செப்டம்பர் 11 அன்று, பாஜக நிகழ்ச்சியில் பேசிய தர்விந்தர் சிங் மார்வா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக வெளிப்படையாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள், இல்லையெனில் உங்கள் பாட்டிக்கு நேர்ந்த கதியை நீங்கள் சந்திப்பீர்கள்” என்று அவர் கூறியுள்ளார். ரயில்வே இணை அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு, ராகுல் காந்தியை “நாட்டின் நம்பர் ஒன் பயங்கரவாதி” என்று குறிப்பிட்டுள்ளார். இதே கருத்தை பாஜகவைச் சேர்ந்த உத்தரப் பிரதேச அமைச்சர் ராகுராஜ் சிங்கும் கூறியுள்ளார்.
ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்கப்படும் என சிவ சேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். அமைதியை சீர்குலைக்கும் நோக்கிலும், வன்முறையை தூண்டும் நோக்கிலும் ராகுல் காந்திக்கு எதிராக வேண்டுமென்றே இவர்கள் இவ்வாறு பேசி உள்ளனர். இவர்களின் இந்த கருத்துக்கள் டிவி சேனல்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவலாக வெளியாகி உள்ளது.
பெண்கள், இளைஞர்கள், தலித்துகள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட பிரிவினர் போன்ற சமூகத்தின் பின்தங்கிய பிரிவினர் தொடர்பான பிரச்சினைகளை ராகுல் காந்தி தொடர்ந்து எழுப்பி வருகிறார். இதுபோன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு பாஜக தீர்வு காணத் தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டையும் ராகுல் காந்தி முன்வைத்து வருகிறார்.
அவரது இத்தகைய விமர்சனத்தை ஏற்க முடியாத பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர் மீது இதுபோன்ற வெறுப்பு நிறைந்த கருத்துக்களைக் கூறுகின்றனர். ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு அவர்கள் இவ்வாறு பேசுகிறார்கள். எனவே, BNS-ன் 351, 352, 353, 61 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையை எந்த தாமதமும் இல்லாமல் உடனடியாக பதிவு செய்யப்பட வேண்டும்.” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.