‘‘முதல்வராகும் விருப்பம் எனக்கும் உண்டு’’ – மவுனம் கலைத்த அஜித் பவார்

“எனக்கும் மாநிலத்தின் முதல்வராகும் விருப்பம் உண்டு” என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முதல் முறையாக அவர் தனது மவுனத்தை கலைத்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் புகழ்பெற்ற தக்துஷேத் ஹால்வாய் கணபதி கோயிலில் பூஜை செய்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அஜித் பவார், “ஒவ்வொருவரும் அவர்களது தலைவர் முதல்வராக வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதனை நான் சொல்லும் போது அதில் நானும் இருக்கிறேன். ஆனால் முதல்வராக வருவதற்கு பெரும்பான்மையை எட்டவேண்டும். எல்லோருடைய விருப்பங்களும் நிறைவேறிவிடாது. சட்டப்பேரவையில் உள்ள 288 இடங்களில் 145 இடங்களை அடைவது அத்தியாவசியம்.

ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்தும் ஆசையும் உண்டு. ஆனால் எல்லோராலும் அவர்கள் விரும்பியதை பெற முடியாது. ஆனால் அதனை எட்ட பாபாசாகேப் அம்பேத்கர் வாக்குரிமை அளித்துள்ளார். இறுதியில் அனைத்து விஷயங்களும் வாக்களர்களின் கைகளில் இருக்கிறது.

நாங்கள் அனைவரும் மகா கூட்டணி அரசு மீண்டும் ஆட்சிக்கு வர உழைத்துக் கொண்டிருக்கிறோம். மகா கூட்டணி அரசு அமைந்த பின்னர், முதல்வர் யார் என்பது குறித்து கூடி அமர்ந்து பேசி முடிவெடுப்போம். வரவிருக்கும் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் மகா யுதி கூட்டணி முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் போட்டியிடும்” என்று தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு பின்பும் ஏக்நாத் ஷிண்டே மீண்டும் முதல்வராக வேண்டும் என்று சிவ சேனா (ஷிண்டே அணி) தலைவர்கள் கூறியிருக்கும் நிலையில் அஜித் பவாரின் இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மறுபுறம், பாஜக தலைவர்கள் சிலர் விநாயகர் ஆசீர்வாதத்தால் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த முதல்வர் விருப்ப ரேஸில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களும் விதிவிலக்கில்லை. அவர்களில் சிலர் மராஷ்டிராவின் சில பகுதிகளில் அடுத்த முதல்வர் அஜித் பவார் என்று போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

இதனிடையே மற்றொரு துணை முதல்வரான தேவேந்திர பட்னாவிஸ் சமீபத்தில் கூறுகையில், “சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்னர் மாநில முதல்வர் பதவி குறித்து பாஜகவின் உயர்மட்டக் குழு முடிவு செய்யும். என்டிஏ கூட்டணியின் முக்கிய தலைவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் அனைவரும் கட்டுப்படுவோம். மாநிலத்தின் தலைவர் என்பதால் அவர் தலைமையில் மக்களைச் சந்திப்போம்” என்றார். மேலும் முதல்வர் பதவி தொடர்பாக மகா யுதி கூட்டணியில் வேறுபாடு இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.