உத்தராகண்டில் மீட்கப்பட்ட தமிழக யாத்திரிகர்கள் 30 பேரும் வேனில் டெல்லி பயணம்

உத்தராகண்ட் ஆதி கைலாஷ் பகுதியில் நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த யாத்திரிகர்கள் 30 பேரும் பித்தோராகாரில் இருந்து வேனில் பத்திரமாக டெல்லிக்குப் புறப்பட்டனர்.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து 18 ஆண்கள், 12 பெண்கள் உள்ளிட்ட 30 பேர் உத்தராகண்ட் மாநிலம், ஆதி கைலாஷ் கோயிலுக்கு கடந்த 1-ம் தேதி ஆன்மிகச் சுற்றுலா புறப்பட்டுச் சென்றனர். ஆந்திரத்தில் ஏற்பட்ட புயல், வெள்ளம் காரணமாக, அவர்கள் உத்தராகண்ட் சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் அவர்கள் ஆதிகைலாஷ் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, வழியில் ஆதி கைலாஷிலருந்து 18 கி.மீ. தொலைவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள ஓர் ஆசிரம பகுதியில் 30 பேரும் பாதுகாப்பாக தங்கினர்.

நிலச்சரிவால் சாலை அடைபட்டதால், கடந்த 6 நாள்களாக அங்கிருந்து அவர்கள் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்து வந்தனர். மேலும், அந்தப் பகுதியில் போதிய உணவு, வாகனத்துக்கான எரிபொருள் வசதி உள்ளிட்டவை இல்லாததால், 30 பேரும் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இது குறித்து சிதம்பரத்தைச் சேர்ந்த ரவிசங்கர் – வசந்தா தம்பதியினர், சிதம்பரத்தில் உள்ள அவரது மகன் ராஜனை கடந்த 14-ம் தேதி கைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், அதன்பிறகு அவர்களை கைபேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை. தகவலறிந்த தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உடனடியாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் தெரிவித்து மீட்பு நட வடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர், உத்தராகண்ட் மாநில அதிகாரிகளை தொடர்புகொண்டு ராணுவம் மூலம் சிதம்பரத்தைச் சேர்ந்த யாத்ரீகர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டார். இதையடுத்து நேற்று முதல் கட்டமாக 15 பேரும், 2-ம் கட்டமாக 15 பேரும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு தார்சூலாவுக்கு கொண்ட வரப்பட்டனர். இந்த நிலையில் முதல்வர் முக.ஸ்டலின் பராசக்தி என்பவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி நலம் விசாரித்தார். அப்போது, “உங்களுக்கு அனைத்து ஏற்படுகளும் செய்யப்பட்டுள்ளது, தைரியமாக இருங்கள். நான் பேசினேன் என்று அனைவரிடமும் கூறுங்கள்” என்று முதல்வர் கூறியுள்ளார். நேற்று அனைவரும் தார்சூலாவில் இருந்து பித்தோராகருக்கு வந்தடைந்தனர்.

அவர்கள் அனைவரும் இன்று (செப்.16) காலை பித்தோராகரில் இருந்து தனக்பூர் வழியாக வேனில் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். ஆனால், லோஹாகாட் – தனக்பூருக்கு இடையே நிலச்சரிவு ஏற்பட்டதால் வேன் ஹல்த்வானிக்கு திருப்பி விடப்பட்டது. அந்த வழியாக டெல்லிக்கு அவர்கள் வந்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்ட நேரத்தில் வர முடியாததால் டெல்லிக்கு இரவு 8 மணி வந்தடைவோம் என்றும் அந்தக் குழுவில் உள்ள ஓய்வு பெற்ற ரயில்வே துறை அதிகாரி கனகராஜ் தெரிவித்துள்ளார்.