“திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கவே விசிக மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறது.” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
காரைக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருமாவளவன் குழம்பிப் போய் உள்ளார். தமிழகத்தில் படிப்படியாக மது ஒழிப்பு சாத்தியமாகும். திருமாவளவன் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில் தவறில்லை. திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கவே மது ஒழிப்பு மாநாட்டை நடத்துகிறார்.
2026-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய கட்சிகள் வர வாய்ப்புள்ளது. அந்தக் கூட்டணியில் அமுமுக தொடர்ந்து பயணிக்கிறது. முதல்வரின் வெளிநாட்டு பயணத்தால் முதலீடுகள் ஈர்க்கப்பட்டது காகிதத்தில் தான் உள்ளது. இலங்கை கடற்படை அத்துமீறல்களை தடுக்க மத்திய அரசு விரைந்து தீர்வு காண வேண்டும். பழனிசாமி 4 ஆண்டுகள் ஆட்சியில் முறைகேடு அதிகரித்ததால், திமுக திருந்திவிட்டதாக நினைத்து அக்கட்சிக்கு வாக்களித்தனர்.
ஆனால் பழனிசாமி ஆட்சியை விட திமுக ஆட்சி மிக மோசமாக உள்ளது. திமுக மீது அனைத்து தரப்பினரும் கோபத்தில் உள்ளனர் ஆனால் பழனிசாமி திமுகவின் ‘பி’ டீமாக செயல்பட்டு, அக்கட்சி வெற்றிக்கு மறைமுகமாக உதவி செய்து வருகிறார். அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் இதை அறிந்து முடிவு கட்ட வேண்டும். இல்லையென்றால் 2026-ம் ஆண்டு தேர்தலுக்கு பின்னர் அதிமுகவுக்கு பழனிசாமி முடிவு கட்டி விடுவார். பழனிசாமி இருக்கும் வரை அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றுபட வாய்ப்பு இல்லை.
மறைந்த தலைவர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோர் குறித்து எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்தால் தான் பிரபலமாக முடியும் என சீமான் தரம் தாழ்ந்து பேசி வருகிறார். இது வருந்தத்தக்கது 2026 தேர்தலில் மக்கள் துணையோடு திமுக கூட்டணியை வீழ்த்துவோம் என்று டிடிவி தினகரன் கூறினார்.