வாழ்க்கை என்பது மிகவும் எளிதானது இல்லை. அதற்கு கடின உழைப்பும், விடாமுயற்சியும் தேவை என்று ராகுல் காந்தியை மறைமுகமாக சாடியுள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். ஜெனிவாவில் உள்ள இந்தியர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முன்னதாக, மக்களவைத் தேர்தல் 2024 பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பெண்களின் வங்கிக் கணக்கிலும் பணம் வரவு வைக்கப்படும் என்று ராகுல் காந்தி உறுதியளித்திருந்தார். அப்போது அவர் ‘கட்டா கட்’ என்ற இந்தி வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தார். தேர்தலின் போது ’எளிமை’ என்ற பொருள் கொண்ட ராகுலின் இந்த சொல்பதம் சமூக ஊடகங்களில் மிகவும் வைரலானது. இந்தநிலையில், சுவிட்சர்லாந்து சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜெனிவாவில் உள்ள இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது: நாட்டில் உள்கட்டமைப்பு வசதி மற்றும் மனிதவளங்களை உருவாக்காத வரை, அதற்கான கொள்கைகளை நடைமுறைக்கு வரும் வரை வளர்ச்சி என்பது கடினமான வேலையாக இருக்கும். வாழ்க்கை என்பது மிகவும் எளிதானது இல்லை. அது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியைக் கொண்டது.
ஒரு வேலையைச் செய்து அதன் மூலம் பலன்பெற்றவர்களுக்கு இது நன்றாகத் தெரியும். அதனால் நாம் நமது வாழ்க்கையில் கடினமாக உழைக்க வேண்டும் என்பதே நான் உங்களுக்குச் சொல்லும் செய்தி. ஒரு நாடு அதன் உற்பத்தித் திறனை வளர்த்துக்கொள்ளாமல் வல்லரசாக முடியாது. நம்மால் அதைச் செய்ய முடியாது. அதற்கு நாம் முயற்சிக்கக் கூடாது என்று சொல்லும் நபர்களும் இருக்கிறார்கள்.
உற்பத்தி இல்லாமல் நீங்கள் உலகின் மிகப்பெரிய சக்தியாக இருக்க முடியுமா? மிகப்பெரிய சக்தியாக விளங்க தொழில்நுட்பம் தேவையாக இருக்கிறது. உற்பத்தி திறனை அதிகரிக்காமல் தொழில்நுட்பத்தை யாராலும் வளர்க்க முடியாது என்று ஜெய்சங்கர் பேசினார்.
சமீபத்தில் அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக் கழகத்தில் உள்ள மாணவர்களிடம் உரையாடிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “உலக உற்பத்தியில் சீனாவின் ஆதிக்கம் அதனை, இந்தியா மற்றும் பெரும்பாலான மேற்கத்திய நாடுகளை அதிக அளவில் பாதித்த வேலைவாய்ப்பின்மையின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்தது” என்று தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் கூறுகையில், “இந்தியாவைப் போலவே மேற்கத்திய நாடுகளும் வேலைவாய்ப்பின்மை பிரச்சினையை சந்தித்தன. ஆனால், சீனா வியாட்நாம் போன்ற நாடுகள் இந்தச் சிக்கலை எதிர்கொள்ளவில்லை. ஏனென்றால் அவை உற்பத்தி கேந்திரங்களாக இருந்தன” என்று தெரிவித்திருந்தார். இவற்றிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராகுல் காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல் அவர் பயன்படுத்தி பிரபலமான வார்த்தையை உபயோகித்து சாடியுள்ளார் அமைச்சர் ஜெய்சங்கர்.