தாலிக்கு தங்கம் வழங்கும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தில் கடந்த 2017-2021 வரை எத்தனை பேர் பயனடைந்துள்ளனர் என்ற விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த சித்ரா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “வீட்டு வேலைகள் செய்து மாதம் 6 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டி என்னுடய பெண் குழந்தையை கல்லூரி வரை படிக்க வைத்தேன். இந்நிலையில் என் மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அரசின் தாலிக்கு தங்கம் திட்டமான மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண திட்டத்தில் திருமண நிதியுதவி பெற கடந்த 2021ல் விண்ணப்பித்தேன்.
அதை பரிசீலித்த அயனாவரம் வட்டாட்சியர், எனது ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கும் அதிகமாக இருப்பதாக கூறி தனது விண்ணப்பத்தை வேண்டுமென்றே நிராகரித்துள்ளார். எனது மகளின் திருமணத்திற்கு இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்க உத்தரவிட வேண்டும்.” எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண திட்டத்தின் கீழ் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர். எத்தனை பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண திட்டத்திற்கு மத்திய – மாநில அரசுகள் ஒதுக்கிய நிதி எவ்வளவு உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் செப்டம்பர் 18-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.