தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு செப்டம்பர் 14-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து திண்டுக்கல் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது.
திண்டுக்கல் ஆட்சியர் மொ.நா.பூங்கொடி தலைமை வகித்து ஆலோசனைக்கூட்டத்தில் பேசுகையில், “தேர்வானது காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும். தேர்வாளர்கள் தேர்வு மையத்துக்கு காலை 8.30 மணிக்குள் வந்து தங்களது வருகை பதிவினை உறுதி செய்திட வேண்டும். தேர்வாளர்கள் தேர்வு மையத்துக்குள் 9 மணி வரை அனுமதிக்கப்படுவர். தேர்வு மையங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைய போதுமான அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்க வேண்டும்.
திண்டுக்கல மாவட்டத்தில் மொத்தம் 82 தேர்வு மையங்களில் 22,693 பேர் எழுத உள்ளனர். தேர்வு எழுதுபவர்களை கண்காணிக்க பறக்கும்படை, நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அலுவலர்கள் முன்னதாக சென்று தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு கீழ்தளத்தில் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்துதர வேண்டும்.
தேர்வு மையங்களில் மருத்துவ உதவி வழங்க தேவையான மருத்துவ குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களை தாயர் நிலையில் வைத்திருக்க வேண்டும்,” என்றார். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷேக் முகைதீன், பழநி சார் ஆட்சியர் சி.கிசான்குமார், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் பிரிவு அலுவலர்கள் பிரபு, சிவராமகிருஷ்ணன், தமிழரசன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.