அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு அரசின் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் தீவிர ஒழிப்பு திட்டத்தின்படி போதையில்லா தமிழகத்தை உறுதி செய்ய உணவு பாதுகாப்புத்துறை மற்றும் காவல் துறையினர் இணைந்து 33 குழுக்கள் அமைக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மற்றும் இதர பகுதிகளில் உள்ள கடைகளிலும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
அதன்படி கடந்த நவம்பர் 2023 முதல் ஆகஸ்ட் 2024 வரை உணவு பாதுகாப்பு துறை, காவல் துறை, உள்ளாட்சி துறையினர் குழுவாக இணைந்து சுமார் 6,231 முறை சோதனைகள் மேற்கொண்டுள்ளனர். அதில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கண்டறியப்பட்ட 349 கடைகளில் சுமார் 3,781 கிலோ புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 349 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.
மேலும், ரூ.86,05,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 26.8.2024 முதல் 1.9.2024 வரையிலான ஒரு வாரத்தில் 33 குழுக்கள் நடத்திய ஆய்வில், 9 கடைகளில் சுமார் 22 கிலோ புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு 9 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. முதன்முறையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.25ஆயிரம் அபராதம் மற்றும் 15 நாட்களுக்கு கடை மூடி சீல் வைக்கப்படும். 2வது முறையாக தவறு செய்தால் ரூ.50 ஆயிரம் அபராதம் மற்றும் ஒரு மாதம் வரை கடை மூடி சீல் வைக்கப்படும். 3 வது முறையாக தவறு செய்தால் ரூ.1 லட்சம் அபராதம் மற்றும் 3 மாதங்களுக்கு கடை மூடி சீல் வைக்கப்படும்.
மாவட்டம் முழுவதும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது மற்றும் இருப்பு வைப்பது கண்டறியப் பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் . தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை, வெளி மாநில மதுவை கடத்தி விற்பனை செய்தல், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்தல் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் நடமாட்டம் தொடர்பாக புகார் ஏதுமிருப்பின் பொதுமக்கள் 94875 48177, 94114 94115 (வாட்ஸ் அப்) மற்றும் 10581 என்ற கட்டணமில்லா எண் மூலம் புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும்.” என்று அறிக்கையில் கூறியுள்ளார்.