கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் விவசாயிகளிடம் இருந்து கன்னிப்பூ, கும்பப்பூ பருவத்தில் 9.18 கோடிக்கு நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் திங்கள் நகர் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை இன்று குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமையில், பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்து விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
பின்னர் பேசிய அமைச்சர்: “கன்னியாகுமரி மாவட்டம் இயற்கையின் அருங்கொடைகள் பெற்ற மாவட்டமாகும். இங்கு நெல் விவசாயம் மிகப்பெரிய அளவில் இருந்து வந்தது நெல் விவசாயம் படிப்படியாக பல்வேறு காரணங்களால் குறைந்து வருகிறது. அதனால் விவசாயிகள் மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறார்கள். தாங்கள் உற்பத்தி செய்த நெல்லை கொள்முதல் செய்வதில் அரசு தரப்பில் பல்வேறு பிரச்சனைகள் இருந்ததாகவும், அதனால் கொள்முதல் குறைந்த அளவில் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் அதனை தனியார் வாங்கி வைத்து விற்பதால் விவசாயிகளுக்கு சரியான விலை கிடைப்பது இல்லை போன்ற பல்வேறு குறைபாடுகள் இருந்தன.
நம்முடைய மாவட்ட ஆட்சியர், விவசாய சங்கங்களுடன் கலந்து பேசி அனைத்து விவசாயிகளிடமிருந்தும் நெல் கொள்முதல் செய்ய செய்வதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் இன்று திங்கள் நகர் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், வாயிலாக மத்திய, மாநில அரசுகளின் நேரடி நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் கே.எம்.எஸ் 2024-2025ம் ஆண்டு கன்னிப் பூ பருவத்திற்கு கன்னியாகுமரி மண்டலத்தில் புத்தளம், தேரூர், குருந்தன்கோடு இருப்பு (திங்கள் நகர்), கடுக்கரை, தாழக்குடி, திட்டுவிளை, செண்பகராமன்புதூர், கிருஷ்ணன் கோவில், சிறமடம் ஆகிய 10 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து, விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது.
மேலும் கடந்த 2023-2024ம் ஆண்டு கன்னிப் பூ பருவத்தில் 33 விவசாயிகளிடம் இருந்து 143 மெ.டன் நெல்லும், கும்மப் பூ கொள்முதல் பருவத்தில் 998 விவசாயிகளிடமிருந்து 3,910 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் முறையே ரூ.32,31,702 மற்றும் ரூ.8,84,97,168 என ஆக மொத்தம் சுமார் ரூ.9.18 கோடி செலுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லிற்கு தமிழ்நாடு அரசால் சன்னரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றிற்கு விலை ரூ.2,320 ஊக்கத் தொகை ரூ.130 என ஆக மொத்தம் ரூ.2,450 ஆகவும், பொது ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றிற்கு விலை ரூ.2,300 ஊக்கத் தொகை ரூ.105 ஆக மொத்தம் ரூ.2,405 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நடப்பு 2024 – 2025 கொள்முதல் பருவத்தில் வேளாண்மை துறையினருடன் இணைந்து 10,000 மெ.டன் நெல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாய பெருங்குடி மக்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் அனைத்து திட்டங்களையும் உரிய முறையில் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று அமைச்சர் கூறினார்.
மேலும் வேளாண்மைத் துறையின் சார்பில் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆடா தொடா, நொச்சி கன்றுகள், தன்னகர நெல் விதைகள், பாரம்பரிய நெல் ரகங்கள், கொட்டார சம்பா, நெல் விதைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியன், பிரின்ஸ் எம்எல்ஏ, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் துணை ஆட்சியர் செல்லப் பாண்டியன், மற்றும் திரளானோர் கலந்துகொண்டனர்.