கொல்கத்தா மருத்துவர் கொலை : காவல்துறை லஞ்சம் கொடுக்க முயன்றதாக பெண்ணின் தந்தை குற்றச்சாட்டு

கொல்கத்தாவில் பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாக மாறிவருகிறது. கொல்கத்தா காவல்துறை தங்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த ஆக.9-ம் தேதி 31 வயதான முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கருத்தரங்கு அறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கைதான முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை 8 நாள்கள் காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியது. இந்த நிலையில், நிதி முறைகேடு வழக்கில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சந்தீப் கோஷ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். சிபிஐ விசாரணையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் செப். 6-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இதனையொட்டி, நேற்று புதன்கிழமை இரவு கொல்கத்தாவில் உள்ள் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவர்கள் நடத்திய போராட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அப்பெண்ணின் தந்தை, “போலீஸார் ஆரம்பத்திலிருந்தே, இந்த வழக்கை மூடிமறைக்க முயல்கின்றனர். பிரேத பரிசோதனைக்காக உடலை எடுத்துச் செல்லும் போது எங்களை அவர்கள் உடலைப் பார்க்க அனுமதிக்கவில்லை.

நாங்கள் காவல் நிலையத்தில்தான் காத்திருந்தோம். பின்னர், உடல் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டபோது, ​​ஒரு மூத்த போலீஸ் அதிகாரி எங்களுக்கு பணம் கொடுத்தார், நாங்கள் அந்தப் பணத்தை வாங்க மறுத்துவிட்டோம்” என்றார். இச்சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.