“வியூகம் வகுப்பதில் ராஜீவ் காந்தியை விட ராகுல் காந்தி வல்லவர்” – சாம் பிட்ரோடா ஒப்பீட்டுப் பார்வை

ராஜீவ் காந்தியுடன் ஒப்பிடும்போது ராகுல் காந்தி அதிக புத்திசாலியாகவும், சிறப்பாக வியூகம் வகுக்கக் கூடியவராகவும் இருப்பதாக இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸின் தலைவர் சாம் பிட்ரோடா பாராட்டு தெரிவித்துள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக வரும் 8ம் தேதி 3 நாள் பயணமாக அமெரிக்கா செல்கிறார். அது குறித்த அறிவிப்பை வெளியிட்ட இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸின் தலைவர் சாம் பிட்ரோடா, ராகுல் காந்தியின் அமெரிக்கப் பயணம் குறித்தும், அவரது அரசியல் குறித்தும் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.

சாம் பிட்ரோடா அளித்த பேட்டியில், “ராகுல் காந்தியின் அமெரிக்கப் பயணம், தனிப்பட்ட முறையிலானது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற அதிகாரபூர்வ நிலையில் அவர் இந்த பயணத்தை மேற்கொள்ளவில்லை. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்திலும், தலைநகர் வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்திலும் ராகுல் காந்திக்கு நிகழ்ச்சிகள் இருக்கின்றன. தேசிய பத்திரிகையாளர் மன்றத்தில் ராகுல் காந்தி, பத்திரிகையாளர்களை சந்திக்க இருக்கிறார்” என தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கும், ராகுல் காந்திக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த பிட்ரோடா, “ராஜீவ் காந்தி, பி.வி. நரசிம்மராவ், மன்மோகன் சிங், வி.பி. சிங், சந்திரசேகர், ஹெச்.டி. தேவே கவுடா போன்ற பல பிரதமர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

ராகுலுக்கும் ராஜீவுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், ராஜீவ் காந்தியைவிட, ராகுல் மிகவும் அறிவாளி, சிந்தனையாளர். ராஜீவ் காந்தியைவிட, சிறப்பாக வியூகம் வகுக்கக்கூடியவர் ராகுல். இருவருக்கும் ஒரே மரபணு உள்ளது. மக்கள் மீதான அவர்களின் கவலைகளும், உணர்வுகளும் ஒரே மாதிரியானவை. அனைவருக்குமான சிறந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதில் இருவருமே உண்மையான நம்பிக்கை உள்ளவர்கள். இருவருமே எளிமையானவர்கள். அவர்களுக்கு பெரிய தனிப்பட்ட தேவைகள் இல்லை” என்று கூறினார்.

“ராஜிவ் காந்தி, ராகுல் காந்தி இருவரின் அடிப்படைகள் தெளிவாக உள்ளன. இருவருமே காங்கிரஸ் கட்சி வகுத்த, கட்சியின் ஒவ்வொரு தலைவரும் நம்பிய இந்தியா எனும் கருத்தியலின் பாதுகாவலர்கள். ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை யாத்திரை, அவருக்கு மிகப் பெரிய அளவில் உதவியுள்ளது.

ராகுல் காந்திக்கு எதிராக முதலில் ஊடகங்களில் உருவாக்கப்பட்ட பிம்பம், ஒரு தனிநபருக்கு எதிரான நன்கு திட்டமிடப்பட்ட பிரச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டது. ராகுல் காந்தியை கேவலப்படுத்த கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டது. மேலும், அவர் உயர்கல்வி படித்தபோது, ​​​​அவர் கல்லூரிக்குச் செல்லவில்லை என்று சிலர் சொன்னார்கள். ராகுல் காந்தி குறித்த தவறான பிம்பத்தை ஏற்படுத்த நிறைய பணம் செலவழிக்கப்பட்டது. எனினும், இதற்கு எதிராக தொடர்ந்து போராடி தன்னை நிலை நிறுத்திக் கொண்டதற்காக ராகுல் காந்தியை பாராட்டுகிறேன்.

ஒரு தனிமனிதர், அவரது குடும்பம், அவரது மரபு, அவரது கட்சி குணம் ஆகியவை மீது தினம் தினம் தாக்குதல் நடத்துவது மோசமானது. எல்லா மக்களிடமும் நீங்கள் எப்போதும் பொய் சொல்ல முடியாது. 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று சொன்ன வாக்குறுதி என்னானது என்று மக்கள் இப்போது பார்க்க ஆரம்பித்துள்ளனர். அதேபோல், கருப்பு பணத்தை திரும்ப கொண்டு வருவோம் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை” என பிட்ரோடா தெரிவித்தார்.

ராகுல் காந்தியை வருங்கால பிரதமராக பார்க்கிறீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த சாம் பிட்ரோடா, “நான் சார்புடையவனாக இருக்கலாம். ஆனாலும், எனது தனிப்பட்ட அனுபவத்தில் ராகுல் காந்தி மிகவும் திறமையானவர் என்று நான் நினைக்கிறேன். அவர் ஒரு கண்ணியமான மனிதர், நன்கு படித்தவர், அவருக்கு சரியான மரபணு உள்ளது. மேலும் நான் அவரை ஜனநாயகம் எனும் கருத்தாக்கத்தின் பாதுகாவலராகப் பார்க்கிறேன். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ராகுல் காந்தி பிரதமராவார் என்ற கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், கட்சிதான் இறுதி முடிவு செய்ய வேண்டும். ராகுல் காந்தியிடம் வருங்காலப் பிரதமரின் குணங்களைப் பார்க்கிறேன்” என குறிப்பிட்டார்.