புதுச்சேரி அகரம் அரசு ஆரம்பப் பள்ளியில் பாடம் எடுக்க ஆசிரியர் இல்லாததால் பள்ளியிலிருந்து குழந்தைகளை இன்று பெற்றோர்கள் போராட்டம் நடத்தி வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
புதுச்சேரி ஊசுடு தொகுதி அகரம் கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் எல்.கே.ஜி முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ளிட்ட மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. இப்பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பணியாற்றிய மழலை ஆசிரியர்கள் கடந்த 55 நாட்களுக்கு முன்பு வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவரை அவருக்கு மாற்றாக ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் மாணவர்கள் கல்வி கற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும், இப்பள்ளியில் இரண்டு வகுப்பறைகள் மட்டுமே உள்ளது. இதனால் கூடுதல் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பல நாட்களாக பெற்றோர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பாடம் எடுக்க ஆசிரியர்கள் இல்லாததால் வெளியில் நின்று கொண்டிருந்தனர். இதனை அறிந்த பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுடன் பள்ளி நுழைவாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு தங்களது பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
இது குறித்து பெற்றோர் கூறுகையில், “அகரம் கிராமத்தில் அரசுப் பள்ளியில் நன்றாக பாடம் நடத்தினர். ஒன்றரை மாதங்களுக்கு முன்பு எல்கேஜி, யூகேஜி மழலை ஆசிரியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். அதன் பிறகு வகுப்பறையில் ஆசிரியர் இல்லாமல் பிள்ளைகள் தனியாக இருக்கின்றனர். சிறு குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என தெரியவில்லை. குழந்தைகளின் பாதுகாப்பு கருதி கல்வித் துறை இயக்குநரை நேரில் சந்தித்து தங்களின் குறைகளை கூறினோம். உடன் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து விடுவர்கள் என இயக்குநர் கூறினார்.
ஆனால், பத்து நாட்களாகியும் ஆசிரியர்கள் வரவில்லை. அதனால் தங்கள் குழந்தைகள் நலன் கருதி அவர்களை வீட்டுக்கு அழைத்து செல்ல முடிவு எடுத்துவிட்டோம். ஆசிரியரை நியமிக்காவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டம் நடத்துவோம்.” என்று பெற்றோர்கள் கூறியுள்ளனர்.