சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு தென்காசி மாவட்டத்தில் 3- ம் தேதி ஆய்வு செய்ய உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2024-25-ம் ஆண்டுக்கான மதிப்பீட்டுக் குழு வருகிற 3-ம் தேதி தென்காசி மாவட்டத்தில் ஆய்வு செய்கிறது. குழு தலைவர் எஸ்.காந்திராஜன் தலைமையிலான குழு உறுப்பினர்கள் தென்காசி மாவட்டத்தில் வேளாண் மற்றும் உழவர் நலன், கால்நடை பராமரிப்பு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன், கூட்டுறவு, நெடுஞ்சாலைகள், சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த பணிகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், இந்து சமய அறநிலையத் துறை, வனம் இயற்கை வளங்கள் ஆகிய அரசுத்துறைகளின் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகைகள், செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் திட்டத்தின் காலவரம்பு, அதன் பயன், அத்திட்ட செயல்முறை வளர்ச்சி மற்றும் தற்போதைய நிலை குறித்து ஆய்வு மேற்கொள்கின்றனர்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர் தலைமையில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கு.செல்வப்பெருந்தகை, ஏ.பி.நந்தகுமார், அம்பேத்குமார், பி.ஆர்.ஜி.அருண்குமார், தா.உதயசூரியன், ராம.கரு மாணிக்கம், காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், தி.சதன்திருமலைக்குமார், மா.சின்னதுரை, எஸ்.சுதர்சனம், செல்லூர் கே.ராஜூ, அ.செ.விஸ்வநாதன், எஸ்.ராமச்சந்திரன், மு.பன்னீர் செல்வம், பாலாஜி, ஓ.எஸ்.மணியன், ஈ.ராஜா, எஸ்.பி.வெங்கடேஷ்வரன், முதன்மைச் செயலாளர் கீ.சீனிவாசன், கூடுதல் செயலாளர் பாலசுப்பிரமணியம், துணைச்செயலாளர் சு.பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுவை அளிக்கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.