பாமர மக்களின் வாழ்க்கையை பெருமுதலாளிகளின் நலனுக்காகப் பணயம் வைப்பதை தமிழக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் – சீமான்

“தூத்துக்குடியில் தனியார் உரத் தொழிற்சாலையில் இருந்து அமோனியா நச்சுப்புகைக் கசிவுக் காரணமாக உயிரிழந்துள்ள ஹரிஹரன் என்ற இளைஞரின் குடும்பத்துக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்குவதோடு, தொழிற்சாலையின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் Tuticorin Alkali Chemicals and Fertilizers Limited என்கிற தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா கசிவின் காரணமாக ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதும், மேலும் இருவர் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். சென்னை கோரமண்டல் ஆலையில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் அமோனியா நச்சுப்புகைக் கசிவு ஏற்பட்டு 42-க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்தனர்.

இதே தூத்துக்குடியில் புதூர் பாண்டியாபுரத்தில் தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் சென்ற ஜூலை மாதம் அமோனியாக் கசிவு ஏற்பட்ட நிலையில், மீண்டும் தூத்துக்குடியில் மற்றுமொரு நச்சுப்புகைக் கசிவு ஏற்பட்டு இம்முறை உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது அரசு இயந்திரத்தின் அப்பட்டமான தோல்வியாகும். சீரழிவுகள் வருமுன் காத்திருக்க வேண்டிய அரசு மூன்று முறை வந்தபின்னும் எதேச்சிகாரப் போக்கினைக் கடைபிடிக்கும் வகையில் தான் தமிழகத்தில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியமோ இன்றளவிலும் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டுள்ளது.

பந்தயங்களிலும் பயணங்களிலும் ஈடுபாடு கொண்டுள்ள திமுக அரசும் அதன் ஆட்சியாளர்களும் மக்களின் உயிருக்கும் வாழ்வாதாரத்துக்கும் எப்பொழுது கவலைகொள்வார்கள்? பார்முலா பந்தயம் ஏற்பாடு செய்யும் அரசு, தமிழகத்தில் தொடர்ந்து ஏற்படும் அமோனியா நச்சுப்புகைக் கசிவினைத் தடுக்க ஆட்சிமுறை பார்முலா எதாவது வைத்துள்ளதா? தொடர்ச்சியாக ஏற்படக்கூடிய தொழிற்சாலை விதிமீறல்களுக்கும் அதனால் நிகழும் சீரழிவுகளுக்கும் தமிழக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். அமோனியா நச்சுப்புகைக் கசிவினால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளித்திட வேண்டும். இந்தத் தனியார் ஆலையில் பணிபுரியும் மற்ற ஊழியர்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

இனியாவது தனியார் ஆலைகளின் நலனை பின்னுக்குத் தள்ளி, மக்களின் உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும், விதிகளை மீறக்கூடிய தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள ஆலைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விதிமீறலுக்கு ஏற்ப தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட வேண்டும். பாமர மக்களின் வாழ்க்கையை பெருமுதலாளிகளின் நலனுக்காகப் பணயம் வைப்பதை தமிழக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டுமென எச்சரிக்கிறேன்,” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.