“வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக உங்களது மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கோவை மேற்கு மண்டல போலீஸாரிடம் மனுக்கள் பெற்று குறை தீர்க்கும் நிகழ்ச்சியில் பேசிய தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உறுதி அளித்துள்ளார்.
தமிழக டிஜிபி-யான சங்கர் ஜிவால் மண்டலம் வாரியாக போலீஸாரிடம் குறைகள் கேட்டு அவை தொடர்பான மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி, இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோவை மேற்கு மண்டல போலீஸாரிடம் மனுக்கள் பெற்று குறை தீர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் டிஜிபி-யான சங்கர் ஜிவால் கலந்து கொண்டு போலீஸாரின் குறைகளை கேட்டறிந்தார்.
குறைகள், கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை போலீஸாரிடம் பெற்றுக்கொண்டு பேசிய டிஜிபி-யான சங்கர் ஜிவால், “கோவை மாநகரம் மற்றும் மாவட்டம், திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டம், நீலகிரி, ஈரோடு மாவட்ட காவல் துறையினர் குறைதீர்ப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.
இதில் 711 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. ஏற்கெனவே இடம் மாறுதல் உள்ளிட்ட மனுக்கள் கொடுத்தவர்களின் பெயர்கள் முன்னுரிமை அடிப்படையிலும் இப்போது மனுக்கள் கொடுக்கும் போலீஸாரின் மனுக்கள் சீனியாரிட்டி அடிப்படையிலும் பரிசீலிக்கப்படும்.
வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக உங்களது மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைவரும் சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகள்,” என்றார். இதனைத் தொடர்ந்து, பணியின்போது ஏற்பட்ட குறைபாடு காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்வது குறித்து பரிசீலனை செய்யும்படி போலீஸார் கொடுத்திருந்த மனுக்கள் மீது டிஜிபி-யான சங்கர் ஜிவால் ஆய்வு செய்து குறைகள் கேட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், கோவை மேற்கு மண்டல ஐஜி-யான செந்தில்குமார், கோவை சரக டிஐஜி-யான சரவணசுந்தர், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மற்றும் கோவை மேற்கு மண்டல காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் கலந்து கொண்டனர்.