ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட பிற மாநிலங்களைப் பின்பற்றி தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் செப்.5-ம் தேதி தமிழகம் முழுவதும் கோரிக்கை முழக்கப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் பொ.அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. ஊழியர்களின் பணத்தை எடுத்து ஊழியர்களுக்கே தருவதாக அதனை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த ஓய்வூதியத் திட்டம் பழைய திட்டத்துக்கு இணையாக இல்லை என்றாலும்கூட அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. ஆனால், தமிழகத்தில், பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்துவிட்டு தற்போது தொடர்ந்து மௌனம் காக்கின்றது. இதனால் அரசு ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது.
இத்தகைய சூழலில் தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. வரும் செப்.5-ம் தேதி ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி இல்லை; அதனால் கொண்டாட்டம் தேவையில்லை. அன்றைய தினம் கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் முதன்மைக் கல்வி அலுவகங்களின் அருகில் கோரிக்கை முழக்க போராட்டத்தை நடத்த வேண்டும்.
இது குறித்து செப்.1-ம் தேதி ஈரோட்டில் நடைபெறவுள்ள மாநில செயற்குழு கூட்டத்தில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளின் கருத்துகளையும் உள்வாங்கி முறையான அறிவிப்பு செய்து போராட்டக் களத்துக்குச் செல்ல வேண்டும். இதன் மூலம் பிற ஆசிரியர் சங்கங்களையும் போராட்டத்துக்கு தயார் செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.