கந்தர்வகோட்டை அருகே அன்னை தெரசா பிறந்த தினம் விழா கொண்டாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் தெத்துவாசல்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் அன்னை தெரசா பிறந்த தினம் விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை தன்னார்வலர் சத்யா செய்திருந்தார். நிகழ்வில் கலந்து கொண்ட இல்லம் தேடி கல்வித் திட்ட கந்தர்வகோட்டை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா  பேசும் போது, அன்னை தெரசா எனும் பெயரை அன்னை எனும் சொல் இல்லாமல் யாரும் சொல்வதில்லை. அந்தளவுக்கு நம் மனதில் வாழ்ந்தவர். தென் கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் 1910-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஸா பொஜனாக்கா. தந்தை நிக்கல் நிகோலா, தாய் பொயாஜியூ திரானி பெர்னாயின் மூன்றாவது மகளாக பிறந்தவர். அன்னை தெரசா கோடிக்கணக்கானோருக்கு மட்டுமல்ல, வரும் தலைமுறைகளுக்கும் ஒரு உத்வேகம். தன் வாழ்நாள் முழுவதையும் பிறர் நலனுக்காக அர்ப்பணித்த இந்த அன்பானவரை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அன்னை தெரசாவுக்கு 1979 ஆம் ஆண்டு தொண்டு மற்றும் ஏழைகளுக்கான மனிதாபிமான சேவைகளுக்காக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இருப்பினும், அவர் அனைத்து பணத்தையும் கொல்கத்தாவின் ஏழைகளுக்கும் தொண்டுக்கும் வழங்கினார். அன்னை தெரசா இந்தியாவில் உள்ள ஏழைகள் மற்றும் உடல்நலம் குன்றியவர்களின் நலனுக்காக தனது பெரும்பாலான நேரத்தை செலவிட்டார். கொல்கத்தாவின் குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்தினார். அன்னை தெரசா வாடிகனிலும், ஐ.நா.விலும் பேசினார். இது ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வாக்கு மிக்கவர்கள் மட்டுமே பெறும் வாய்ப்பாகும்.

அன்னை தெரசா 1950 ஆம் ஆண்டு மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி என்ற பெயரில் தனது அமைப்பைத் தொடங்கினார். அந்த அமைப்புகள் இன்று வரை ஏழைகள் மற்றும் நோயாளிகளை கவனித்து வருகின்றன. மேலும், உலகின் பல்வேறு பகுதிகளில் அமைப்பின் பல கிளைகள் உள்ளன என்று பேசினார். இதில் முகிதா, மிருத்திகேஷ், ரீசிதா, சக்திவேல் உள்ளிட்ட மாணவர்கள் அன்னை தெரசா குறித்து கவிதைகள், பாடல்கள் பாடினார்கள். நிறைவாகவாக மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.