அறந்தாங்கியில் 50-ம் ஆண்டு பொன்விழாவில் முன்னாள் மாணவர்கள் பள்ளியில் சந்திப்பு

புதுக்கோட்டை  மாவட்டம், அறந்தாங்கியில் அரசு மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1974 ஆண்டு முதல் 1981ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அன்புக்கூடு என்ற வாட்ஸ்ஆப் குரூப் மூலம் ஒன்றிணைந்து இன்று தனியார்  பள்ளியில் சந்திப்பு விழா நடைபெற்றது.

50 ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்தித்த நூற்றுக்கும் மேற்பட்ட  முன்னாள் மாணவர்கள் அனைவரும் வேட்டி சட்டை அணிந்து வந்து பழைய நினைவுகளை நினைத்துப்படுத்தி மகிழ்ந்தனர். தங்களுக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு பாடம் கற்பித்த ஆசிரியர்களை அழைத்து அவர்களை கௌவரப்படுத்தும் வகையில் சால்வை அணிவித்தும், முன்னாள் மாணவரும் தொழிலதிபருமான முத்துப்பட்டிணம் ரெத்தினம் என்பவர் ஆசிரியர்களுக்கு தலா 4 கிராம் மதிப்புள்ள தங்க மோதிரத்தையும் அணிவித்து மகிழ்ந்தார்.

பின்னர் ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்களுக்கு  நற்கருத்துகளை கூறி பேசினார்கள். பின்னர் பழைய நினைவுகளை பகிர்ந்து  தாங்கள் படித்தபோது ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கிய தண்டனைகளை நினைவுபடுத்தும் விதமாக ஆசிரியர்களிடம் குச்சியால் அடி வாங்கி  மகிழ்ந்தனர். பிறகு அனைத்து மாணவர்களும் பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தும் வகையில் ஐஸ் சாப்பிட்டு  மகிழ்ந்ததோடு செல்பியும் எடுத்துக் கொண்டனர். 

முன்னாள் மாணவர்  நடத்தும் தனியார் பள்ளியில் நடைபெற்ற இந்த சந்திப்பு விழாவில் அனைவருக்கும் மதியம் தலைவாழை  இலையில் சுவையுடன் கூடிய மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது. தங்களுக்கு வழங்கப்பட்ட பிரியாணியை முன்னாள் பள்ளி தோழர்கள் ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில் அனைத்து பள்ளி நண்பர்களும் ஒன்று கூடி மன மகிழ்வுடன் ஆடிப்பாடி மகிழ்ந்த நிலையில், நிகழ்ச்சியின் இறுதியில் அனைவரும் எழுந்து நின்று தேசிய கீதத்துடன் விழாவை நிறைவு செய்தனர்.\

நிகழ்வில் முத்துப்பட்டிணம் ரெத்தினம் அன்புக்கூட்டின் கெளரவ தலைவராகவும், மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி சுப்பிரமணியன் தலைமையிலும், அருட்செல்வம், இஸ்மாயில் அக்பர், டாக்டர் ரவீந்திரநாத், ரவிகணேஷ், மங்களம் சேக் அப்துல்லா முன்னிலையிலும் நடைபெற்றது. ஐடியல் பள்ளி சேக் சுல்தான் வரவேற்புரையும், பாலசுந்தரம் நன்றியுரையும் ஆற்றினர்.