சிதம்பரத்தில் தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்திட நடராஜர் கோயில் நிர்வாகத்தை வலியுறுத்தி தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பில் கவன ஈர்ப்பு தொடர் முழக்க போராட்டம் இன்று நடைபெற்றது.
சைவ – வைணவ பாகுபாட்டை கைவிட்டு தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்த சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் ஒத்துழைக்க வேண்டுமென்று வலியுறுத்தி கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்று 3-ம் கட்ட போராட்டமாக சிதம்பரம் ஸ்ரீ கோதண்ட ராமர் ஆலயத்தில் 1008 முறை நமோ நாராயணா, ஓம் நமச்சிவாயா என்று கூறி தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பில் கவன ஈர்ப்பு தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.
மன்னர்களால் கட்டப்பட்ட சிதம்பரம் நடராஜர் கோயில் தற்பொழுது பொது தீட்சிதர்கள் நிர்வாகத்தில் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் கி.பி 726-ம் ஆண்டு நந்திவர்ம பல்லவ மன்னரால் கட்டப்பட்டது. 1334-ம் ஆண்டு 2-ம் குலோத்துங்க சோழ மன்னர் நடராஜர் கோயிலில் கட்டுமானப் பணி மேற்கொண்ட போது தில்லை கோவிந்தராஜ பெருமாள் சிலை அப்புறப்படுத்தப்பட்டது. மீண்டும் அதே இடத்தில் 1564-ம் ஆண்டு கிருஷ்ணப்ப நாயக்க மன்னரால் தில்லை கோவிந்தராஜ பெருமாள் சிலை வைக்கப்பட்டது.
இக்கோயிலில் சைவ – வைணவ பாகுபாட்டால் சுமார் 400 ஆண்டு காலமாக பிரமோற்சவம் நடத்தப்படாமல் உள்ளது. தற்போது தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் இந்து சமய அறநிலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பிரமோற்சவம் நடத்துவதற்கு அறநிலைத்துறை மற்றும் அறங்காவலர்கள் முன்வந்தும் பொது தீட்சிதர்கள் ஒத்துழைப்பு வழங்காமல் பிரம்மோற்சவம் நடத்துவதற்கு தடை விதித்து வருகின்றனர்.
எனவே, பிரமோற்சவம் நடத்த பொது தீட்சிதர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு 3-ம் கட்ட போராட்டம் இன்று காலை 11 மணி அளவில் சிதம்பரம் மேல வீதியில் உள்ள ஸ்ரீ கோதண்ட ராமர் ஆலயத்தில் நடைபெற்றது. தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பில் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் 1008 முறை நமோ நாராயணா ஓம் நமச்சிவாயா என்று சொல்லி பிரார்த்தனை செய்து சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு கவன ஈர்ப்பு தொடர் முழக்கம் செய்யப்பட்டது.
இந்தப் போராட்டத்துக்கு தெய்வீக பக்தர் பேரவை நிறுவனத் தலைவர் ஜெமினி எம்.என்.ராதா தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் பி.செல்வகுமார், மாநில பொதுச் செயலாளர்கள் ராஜசேகர் ரகோத்தமன், ஆட்டோ குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் சம்பந்த மூர்த்தி வரவேற்றுப் பேசினார். இதில், பத்ரி நாராயணன் ஐயங்கார் கலந்து கொண்டு சிறப்பு அர்ச்சனை செய்தார். பரணி, உதய பாஸ்கரன், குணசேகரன், தெய்வநாயகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாநில பொதுச் செயலாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.