புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச திரைப்பட விழாவை முன்னிட்டு “ஸ்கூல் சினிமா” திரையிடப்பட்டது

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச திரைப்பட விழாவை முன்னிட்டு “ஸ்கூல் சினிமா” திரையிடப்பட்டது. தமிழகத்தில் முதன் முறையாக பள்ளி மாணவர்களுக்கு ஒரு பாடவேளை ஒதுக்கி வாராவாரம் சினிமா திரையிடப்படுகிறது.

இதற்காக சர்வதேச அளவிலான திரைப்படங்களை திரையிடும் ஸ்கூல் சினிமா அமைப்புடன் இணைந்து மாணவர்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு மொழித் திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. அந்த வகையில் இன்று பள்ளியில் அமைந்த ஏசி அறைகளில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான திரைப்படங்கள் திரையிடப்பட்டன. மூன்றாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களும், ஏராளமான பெற்றோர்களும் திரைப்படம் காண ஆவலோடு தங்கள் பெயர்களை பதிவு செய்து டிக்கெட் பெற்று திரைப்படம் பார்த்தனர். காலை 9 மணி துவங்கி ஒரு மணி வரையிலும் படங்கள் திரையிடப்பட்டன. இடைவேளையின் போது தியேட்டர்களைப் போலவே அனைவருக்கும் நொறுக்குத் தீனிகள் வழங்கப்பட்டன.

ஸ்கூல் சினிமா நிகழ்வைத் தொடங்கி வைத்து இதுபற்றி பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி கூறும்போது “மாணவர்களுக்கு பாடங்களில் மூலமாக மட்டுமல்ல படங்களின் மூலமாகவும் விழிப்பணர்வுக் கருத்துகளை தெரிவிக்கும் ஒரு ஏற்பாடுதான் இந்த ஸ்கூல் சினிமா. தமிழத்தில் எங்கள் பள்ளியில்தான் முதன்முதலாக ஸ்கூல் சினிமா மாணவர்களுக்கு காட்டப்படுகிறது. தற்போது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் மாணவர்களுக்கு பல்வேறு மொழிகளில் அமைந்த திரைப்படங்களைத் திரையிடுகின்றோம். இந்தத் திரைப்படங்களின் வழியே பல்வேறு நாடுகளின் நிலங்களின் பண்பாடு, கலாச்சாரம் போன்ற ஏராளமான விசயங்களை நடைமுறைகளை மாணவர்கள் அறிந்து கொள்கின்றனர் என்று தெரிவித்தார்.

பெற்றோர்களும் ஆர்வமாக இந்த பட விழாவில் கலந்து கொண்டு தரமான சினிமாக்களை வகுப்புகளில் வாராவாரம் திரையிட்டு மாணவர்களுக்கு பயனுள்ள பல விழிப்புணர்வு சினிமாக்களை திரையிடும் பள்ளியின் முதல்வருக்கு பாராட்டுகளைத் தெரிவித்தனர். இந்த நிகழ்வில் பள்ளியின் இயக்குனர் சுதர்சன், துணை முதல்வர் குமாரவேல், கல்வித்துறையைச் சேர்ந்த வேங்கட சுப்பிரமணியன், ஒருங்கிணைப்பாளர்கள் கொளரி, வரலெட்சுமி, பாலசங்கர், மீனாட்சி, மேலாளர் ராஜா, ஆசிரியர்கள் காசாவயல் கண்ணன், உதயகுமார், ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வை ஸ்கூல் சினிமா பொறுப்பாளர் ஆசிரியை நர்மதா தேவி தொகுத்து வழங்கினார்.